Crime, law and justice
“என் மகனை ஆணவப்படுகொலை செஞ்சுட்டாங்க..!”

மதுரையில் 11-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், ஆணவக்கொலை குற்றச்சாட்டாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
மதுரை கூடல்நகர், வானவில் தெருவைச் சேர்ந்த யோகலட்சுமி–கருப்பசாமி தம்பதியின் மகன் தமிழ்ச்செல்வன். மேட்டுத் தெருவைச் சேர்ந்த துரைபாண்டியின் மகளும் தமிழ்ச்செல்வனும் காதலித்திருக்கின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காதல் விவகாரம் வெளியே தெரிய வர, தமிழ்ச்செல்வனை துரைபாண்டி கண்டித்திருக்கிறார். இந்த நிலையில், செப்டம்பர் 6-ம் தேதி கிரிக்கெட் விளையாடச் சென்ற தமிழ்ச்செல்வன், ஆனையூர் கழிவு நீரேற்று நிலையம் அருகேயுள்ள குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். “தமிழ்ச்செல்வனின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. துரைபாண்டிதான் அவனைக் கொலை செய்திருக்க வேண்டும்” என்று தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
போராட்டக் களத்தில் இருந்த தமிழ்ச்செல்வனின் தாய் யோகலட்சுமியிடம் பேசினோம். “என் மகன் தமிழ்ச்செல்வனும் மேட்டுத் தெருவைச் சேர்ந்த துரைபாண்டியோட மகளும் காதலிக்கிற விஷயம் ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் எனக்குத் தெரியும். அந்தப் பொண்ணோட அப்பா துரைபாண்டி என் மகனை ரெண்டு, மூணு தடவை மிரட்டியிருக்காரு. என் மகனோட கூட்டாளிங்க மூலமாதான் இந்த விஷயம் எனக்குத் தெரிய வந்துச்சு. ‘படிக்குற வயசுல இதெல்லாம் தேவையாப்பா?’ன்னு என் பையன்கிட்ட கேக்கவும், ‘அந்தப் பொண்ணோட இனிமே பழக மாட்டேன்’னு சொல்லிட்டான்.
ஞாயித்துக்கிழமை (செப்டம்பர் 6-ம் தேதி) காலையில விளையாடப்போறதா சொல்லிட்டுப் போனவன், திரும்ப வரவேயில்லை. எல்லா இடத்துலயும் நாங்க தேடிப் பார்த்தோம். கிடைக்கலை. அந்தச் சமயத்துல துரைபாண்டிகிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. திரும்ப போன் பண்ணப்ப, ‘நான் கூப்பிடவே இல்லை’ன்னு சொல்லிட்டாரு. ராத்திரி வரைக்கும் என் பையன் வராததால கூடல்நகர் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுத்தேன். அடுத்த நாள் திரும்பவும் எல்லாரும் சேர்ந்து தேடிக்கிட்டு இருந்தப்ப, ‘ஆனையூர் குளத்துல மூழ்கி என் பையன் இறந்துட்டான்’னு தகவல் கிடைச்சுது.
என் பையனோட மொத்தம் அஞ்சு பேரு விளையாடப் போனாங்க. அவங்ககிட்ட விசாரிச்சப்ப, ‘குளத்துகிட்ட ரெண்டு பேர் வந்து தமிழ்ச்செல்வனை அடிச்சாங்க’ன்னு சொன்னாங்க. அவங்க யாருன்னு கண்டுபிடிக்கணும். என் மகன் சாதாரணமா சாகலை. அவனை அடிச்சு, கொலை செஞ்சிருக்காங்க” என்றார் கதறலுடன்.
‘பெண்கள் எழுச்சி இயக்கத்தை’ சேர்ந்த மகாலட்சுமி நம்மிடம், “தமிழ்ச்செல்வனும் தன்னோட பொண்ணும் காதலிக்கிறது தெரியவந்ததும், துரைபாண்டி தன்னோட பொண்ணை திருநெல்வேலிக்கு அனுப்பி வெச்சுட்டார். தமிழ்ச்செல்வன் காணவில்லைன்னு தெரிஞ்சதும், அவன் அந்தப் பொண்ணைத் தேடி திருநெல்வேலிக்குப் போயிருக்கலாம்னு நினைச்சோம். அவன் சேர்த்து வெச்சிருந்த 200 ரூபாய் பணம் இருக்கான்னு அவனோட ஸ்கூல் பையில தேடிப் பார்த்தோம். ஆனா, அந்தப் பணம் அப்படியே இருந்தது. அதோட, தமிழ்ச்செல்வனும் அந்தப் பொண்ணும் எழுதிக்கிட்ட அஞ்சு காதல் கடிதங்களும் கிடைச்சுது.
தமிழ்ச்செல்வனோட குடும்பம் ஒன்றரை ஆண்டுக்கு முன்னால மதுரையில இருக்குற முல்லை நகர்ல குடியிருந்தாங்க. அந்தப் பகுதியில பட்டியலின மக்கள் அதிகம் வசிக்குறதால, தமிழ்ச்செல்வனையும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்னு துரைபாண்டி நினைச்சிருக்காரு. மகளை அவன் காதலிக்கிற விஷயத்தோட, இதுவும் அவருக்குக் கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியிருக்கு. அதனால, ரெண்டு மூணு தடவை தமிழ்ச்செல்வனை அழைச்சு மிரட்டி, அடிச்சிருக்காரு. தமிழ்ச்செல்வனை மிரட்டினதா சொல்லப்படும் ரெண்டு பேரும் துரைபாண்டி வசிக்கிற மேட்டுத் தெருவைச் சேர்ந்தவங்கதான்.
துரைபாண்டி மேல இன்னமும் வழக்கு பதிவு செய்யாம அலைக்கழிக்கிறாங்க. இது ஆணவக்கொலைதான். இதை தீவிரமா விசாரிச்சு சம்பந்தப்பட்ட குற்றவாளிங்க மேல கடுமையான நடவடிக்கை எடுக்கணும்” என்று கோரிக்கை விடுத்தார். துரைப்பாண்டி தலைமறைவாக இருப்பதால், அவர் தரப்பு கருத்தை அறிய முடியவில்லை.
மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் விளக்கம் கேட்டபோது, “தமிழ்ச்செல்வனுடன் ஐந்து மாணவர்கள் குளிப்பதற்காகச் சென்றிருக்கின்றனர். அப்போது தவறுதலாக தமிழ்ச்செல்வன் தண்ணீரில் விழுந்து இறந்திருக்கிறார். இதை வெளியே சொன்னால் தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படுமோ என்ற பயத்தில் அவர்கள் வெளியில் சொல்லவில்லை. இதை என்னிடம் மாணவர்களே சொன்னார்கள்.
தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர், அவர் காதலித்த பெண்ணின் தந்தைதான் கொலை செய்ததாகக் கூறுகிறார்கள். நாங்கள் விசாரித்த வரை அப்படியான சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை. சம்பவம் நடந்த இடத்திலும் துரைபாண்டி இல்லை. உடற்கூறாய்வு அறிக்கையிலும் உயிருடன் இருக்கும்போதே தண்ணீரில் விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இறுதி உடற்கூறாய்வு அறிக்கை வரவில்லை. அது வந்த பிறகுதான் முடிவுசெய்ய முடியும்” என்றார்.
ஒருபுறம் ஆணவக்கொலை எனக் கதறும் குடும்பம்... மறுபுறம் நீரில் தவறி விழுந்துதான் மாணவன் உயிரிழந்ததாகக் கூறும் காவல்துறை... எது உண்மை?
