Crime, law and justice
மதுரை: முட்புதரில் சிறுவனின் சடலம்.. காதல் விவகாரத்தில் நடந்தேறிய கொலையா?

ஒரே வகுப்பில் பயின்ற மாணவியிடம் நட்பு ரீதியாகப் பேசி வந்த நிலையில், மாணவியின் தந்தையால் சிறுவன் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் திடுக்கிடும் பின்னணி என்ன?
மதுரையில் கிரிக்கெட் விளையாடச் சென்ற சிறுவன், முட்புதரில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், ஊர் மக்களை நடுநடுங்க வைத்துள்ளது.
மதுரை மாநகர் கூடல்நகரில் வசிக்கும் யோகலெட்சுமி - கருப்பசாமி தம்பதியின் மகனாக, தமிழ்செல்வன் மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிறு விடுமுறை அன்று காலையில் கிரிக்கெட் விளையாட செல்வதாக, தனது தாயாரிடம் கூறிவிட்டு தமிழ்செல்வன் வீட்டிலிருந்து சென்றுள்ளார். ஆனால் மாலை வரை வீடு திரும்பாத நிலையில், சிறுவனை அவரது தாயார் மற்றும் உறவினர்கள் ஊர் முழுக்க தேடி உள்ளனர். எந்த தகவலும் கிடைக்காததால் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து, சிறுவனை தேடி ஊருக்குள் சென்றனர். அப்பொழுதுதான் மதுரை ஆனையூர் கழிவுநீரேற்று நிலையம் அருகே உள்ள கண்மாய் முட்புதரில் சிறுவன் தமிழ்செல்வன் சடலமாக கிடந்ததை கண்டுள்ளனர். விளையாடச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டது தெரிந்து அவரது குடும்பத்தினர் துடிதுடித்துப் போனார்கள்.
இதனை அடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்து மாணவனின் சடலத்தை மீட்டு, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணவனின் தாயார் "தனது மகன் 10 ஆம் வகுப்பு பள்ளி மாணவியிடம் நட்பு ரீதியாகப் பேசி வந்த நிலையில்.. மாணவியின் தந்தை சில நாட்களுக்கு முன்பு சிறுவனை அழைத்து கண்டித்ததாகவும் எனவே மாணவியின் தந்தை மீது சந்தேகமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும் மாணவனின் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? என்பது குறித்து போலீஸ் விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.. அதுவரை மாணவனின் மரணத்தில் உள்ள மர்மம் தொடரும்..
