Politics
இடைத் தேர்தலில் இடதுசாரிகளின் போட்டி! முடிவுகள் மாறுமா?

தமிழகத் தேர்தலில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிட்டு நீண்ட காலமாகிறது. நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுராந்தகத்திலும் போட்டியிடு கின்றன. தமிழகத்தை ஆளும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இடதுசாரி கட்சிகள் செயல்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கின்றது. குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்கிற அதிதீவிர நச்சல் சித்தாந்தத்தை பின்பற்றும் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுவதை தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். மிகவும் சிறிய குழுக்களாக நகர்ப்புறங்களிலும், கிராமப் புறங்களிலும், மலைப்பகுதிகளிலும் இயங்கும் மா.லெனினிஸ்ட் கட்சிகளின் ஒரு பிரிவான மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவன் என்கிற பாடகர், "ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயசிலே கொண்டாட் டம்'’ என மது ஒழிப்புக்கு ஆதரவாக பாடிய பாடல் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’ என்கிற அடிப்படையில் 1967 முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் மா.லெ. குழுக்கள் தமிழகத் தில் நடந்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளன. தூய்மைப் பணியாளர் போராட்டம் தொடங்கி டெல்லியில் நடந்த காக்ரோச் ஜனதா கட்சிப் போராட்டம் வரை இவர்கள் பங்கெடுக்காத போராட்டங்களே இல்லை. கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், எட்டுவழிச் சாலை எதிர்ப்புப் போராட்டம் என இவர்களது பங்களிப்பு இல்லாமல் எந்தப் போராட்டமும் தமிழகத்தில் நடை பெற்றதில்லை. இப்படி மக்களுக் காகவே போராடி தங்களது வாழ்வைத் தியாகம் செய்த இந்த தோழர்கள் பெரிய கம்யூனிஸ்ட் கட்சிகளான இ. கம்யூனிஸ்ட், மா.கம்யூனிஸ்ட் கட்சிகளை நோக்கி முன்வைக்கும் கோரிக்கை களாக, ‘எங்களை உங்கள் அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள், நாம் இடதுசாரிகளின் ஒற்றுமைப் படுத்தப்பட்ட அணியை உருவாக்குவோம், அதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவோம்’ என்பதுதான். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு பெரும் அணிகளுடன் பயணித்து வந்த வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த மா.லெ. தோழர்களைப் பார்த்து ஒருவித ஒவ்வாமையுடன் கடந்து சென்றன.
உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இவற்றில் சுயேச்சை களாக மா.லெ. தோழர்கள் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்று உண்மையான மக்கள் செல்வாக்கை நிரூபித்து வந்தார்கள். பணம் விளையாடும் தமிழக பொதுத் தேர்தல்களில் ‘அரிவாள் சுத்தி’ கொடியுடன் இவர்கள் எழுப்பிய கோஷம் மீடியாக்களின் கவனத்தைக் கூட கவரவில்லை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் போராட்டக் களத்திலேயே
இந்த தோழர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணித் தார்கள். ஆனால் தொடர்ந்து வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இடதுசாரி முன்னணி அமைப்பது பற்றி பேசி வந்தார்கள். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சோபிக்காத அரசு ஊழியர் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் போன்றவற்றில் இந்த தோழர்கள் பதித்த முத்திரை இவர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்நிலையில் இவர்களுடன் இணைந்து இருபெரும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது இடது முன்னணியை அமைத்ததோடு, இவர்களது பாணியிலேயே தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தனித்துப் போட்டி என அறிவித்துள்ளன. போட்டியிடும் வேட்பாளர்கள் வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் களத்தில் நாங்கள் முன் நின்று போராடுவோம் என்கிறார்கள் மா.லெ. சித்தாந்தத் தோழர்கள் நம்பிக்கையுடன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவில் தோழர் பாலபாரதி, கனகராஜ் தலைமையில் தோழர்கள் த.வெ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரியிலும், திருச்சியிலும் நடந்த மாநிலக் குழுக்களில் இந்தப் போராட்டம் வலுவாக நடந்தது. கன்னியாகுமரியில் நடந்த மாநிலக் குழு, “"த.வெ.க. அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரை பார்ப்போம். அதில் த.வெ.க.வின் வர்க்கசார்பு நிலையை ஆராய்வோம். அதன்பிறகு முடிவெடுப்போம்'’என்றார்கள் தலைமைத் தோழர்கள்.
சு.வெங்கடேசன் போன்ற விஜய் ஆதரவாளர்களின் பேச்சை மார்க்சிஸ்ட்டுகள் கடுமையாக எதிர்த்தார்கள். தி.மு.க. அரசு மார்க்சிஸ்ட் எதிர்ப்பினால் கைவிட்ட தனியார் பல்கலைக் கழகங்களுக்கான ஆதரவு மசோதாவை த.வெ.க. அரசு நிறைவேற்றுவது கடுமையான விமர்சனமாக தோழர்களால் முன்வைக்கப்பட்டது. இடைத்தேர்தல் பற்றிய பத்திரிகையாளர் சந்திப்பில் அதை அப்படியே எதிரொலித்தார் தோழர் பெ.சண்முகம். மாநிலக் குழுவில் ‘த.வெ.க. அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுங்கள்’ என்பதுதான் தோழர்களின் கருத்தாக இருந்தது. அதைச் சமாதானம் செய்ய இடது அணியாக தனித்துப் போட்டி என பெ.சண்முகமும், வீரபாண்டியனும் சேர்ந்து அறிவித்துள்ளனர். இந்த இரு தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.
“தேர்தலில் போட்டியிடுவதை விட ‘த.வெ.க. அரசுக்கு ஆதரவு வாபஸ்’ என்கிற நிலையை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் போராடும் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி போன்றோர் நிலையாக இருக்கிறது. இன்று மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட், தீவிர கம்யூனிஸ்ட் குழுக்களின் பாதையில் ‘தனித்துப் போட்டி’ என முடிவெடுத் திருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் என்றுமே த.வெ.க. ஆதரவு நிலையை மறுபடியும் எடுக்கவே முடியாது. இது இடதுசாரி இயக்க வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படும். "இந்த முடிவு ‘"இடதே மாற்று'’என்கிற கம்யூனிஸ்ட்களின் கொள்கைக்கு புது உரம் ஏற்றியிருக்கிறது' என்கிறார்கள் நீண்டகால இடதுசாரி அரசியல் பார்வையாளர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)