Politics
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பொறியாளர் ஜானகிராமன் களம் காண்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குப் பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. நாம் தமிழர் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் கோ.ஜானகிராமனும் தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகாவும் களமிறங்கவுள்ளனர்.
அதேபோல புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் ச.கார்த்திக் குமாரியும் களமிறக்கப்படவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
"வருகின்ற புரட்டாசி 19ஆம் நான் 06-10-2026 அன்று நடைபெறவிருக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கீழ்க்காணும் வேட்பாளர்கள் போட்டியிடவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
