Politics
பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கரில் அமைகிறது புதிய தலைமை செயலகம்; கிடைத்தது க்ரீன் சிக்னல்

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலக கட்டடம் , சென்னை பட்டினப்பாக்கத்தில் 25.16 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது. இதற்கான, அனுமதியை வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, முதல்வர் அலுவலகம், தலைமை செயலகம் மாற்றத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அண்மையில் சட்டசபையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று அறிவித்த முதல்வர் விஜய், தற்போதைய தலைமை செயலகமாக செயல்படும், புனித ஜார்ஜ் கோட்டை பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
புதிய தலைமை செயலகம் எங்கு அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது, அதற்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, பட்டினப்பாக்கம் எனப்படும் போர்ஷோர் எஸ்டேட்டில் சுமார் 25.16 ஏக்கரில் புதிய தலைமை செயலகத்தை கட்டுவதற்கு, தமிழக வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருவாய்த்துறைக்கு சொந்தமான கூடுதல் நிலங்களுடன் சேர்த்து மொத்தம் 26.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருப்பதாகக் கூறுகின்றனர். இதையடுத்து, விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ள இந்தக் கட்டடம், 15 அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. இதன் மதிப்பு ஒரு சதுர அடி 22,000 வீதம், மொத்தம் ரூ.2,047 கோடியாக உள்ளது. வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இந்தப் பகுதியில் இருந்து, சாந்தோம் முக்கிய சாலையை எளிதில் அணுக முடியும்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'புதிய தலைமை செயலகம் அமைக்க தமிழக அரசு 3 இடங்களை பரிசீலனை செய்தது. போர்ஷோர் எஸ்டேட் (பட்டினப்பாக்கம்), கிண்டியில் உள்ள தேசிய ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கத்தில் உள்ள பின்டெக் சிட்டி அருகே உள்ள இடம் தேர்வு செய்யப்பட்டன. இதில், 25 ஏக்கர் நிலத்தைக் கொண்ட பட்டினப்பாக்கம் சிறந்த இடமாக உள்ளது,' என்றனர்.
தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான இந்த இடம், 1958ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, சுமார் 1963 முதல் 1998 வரையில் சுமார் 1,380 அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டன. இவை தற்போது சிதிலமடைந்ததால், அதனை இடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
பெயர் வந்தது எப்படி?