Politics
“இந்தச் சலசலப்பு எல்லாம் அஞ்சமாட்டோம்” - அன்பில் மகேஸ் பேட்டி!

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (16.09.2026) சோதனை நடத்தினர். இது தொடர்பாக அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, “ஆளாளுக்கு ஏதாவது ஒரு செய்தி போட்டுக்கொண்டே இருந்தார்கள். அதன் அடிப்படையில், சந்தேகத்தின் அடிப்படையில் இன்று வந்து கிட்டத்தட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை சிசிபியிலிருந்து நேரடியாக காலை 7.40 மணிக்கு வந்தார்கள். கிட்டத்தட்ட 3.40 மணி வரைக்கும், 8 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து ஏதாவது நமக்குக் கிடைக்குமா என்ற விதத்தில் ஒரு சர்ச் மாதிரி முழுமையாக வீடு முழுவதும் பார்த்தார்கள்.
வந்த உடனே நான் எல்லா ரூமையும் திறந்துவிட்டேன். எல்லா டிராயர்களையும் திறந்து, ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் சர்ச் பண்ணிக்கோங்க’ என்று நாங்கள் சொல்லிவிட்டோம். அவர்கள் முழுமையாக பார்த்துவிட்டு, அங்கு இருக்கக்கூடிய ஆவணங்கள் என்னென்ன இருந்தன என்றால், நான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது 10 மற்றும் 12ஆம் வகுப்பு ரிசல்ட்டுக்காக நான் வைத்திருந்த ஆவணங்கள், என்னென்ன சாதனைகள் செய்திருந்தோம் என்பதற்கான ஆவணங்கள். ஒவ்வொரு மாவட்டமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நான் ஆய்வுக்கு சென்றிருந்தபோது, ஒவ்வொரு மாவட்டத்திலும் துறை சார்ந்து என்னென்ன ஆய்வு செய்திருக்கிறேன் என்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாக ஃபைல்கள் வைத்திருந்தேன். அந்த மாதிரியான ஃபைல்கள். பொதுவாக கல்வித்துறையைச் சார்ந்து இருக்கக்கூடிய என்னென்ன புதிய திட்டங்கள், இந்த மாதிரி என்னென்ன ஃபைல்கள் கல்வி சார்ந்து நான் வைத்திருந்தேனோ, அதையெல்லாம் அவர்கள் வந்து இப்போது எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.
அவர்கள் 18ஆம் தேதி அன்று நேரடியாக வந்து, ‘நீங்கள் வந்து நான் கேட்கிற சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கண்டிப்பாக நான் ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று சொல்லியிருக்கிறேன். அவர்கள், ‘இந்த மாதிரி யாரும் ஒரு ஒத்துழைப்பு கொடுத்து ஒரு சர்ச் நாங்கள் இதுவரைக்கும் பண்ணதே இல்லை. அதை நீங்கள் தான் சார் ஃபர்ஸ்ட் பண்ணியிருக்கீங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன். எங்களுக்கு மடியில் கனம் இல்லை; வழியில் பயம் இல்லை. மற்றொன்று, சட்டமன்றத்தில் எதிர்த்து நின்று பேசினால் அடுத்த நிமிஷம் நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து ஒரு ரெய்டு அடிக்கிறீர்கள்.
சரி, சட்டமன்றத்தில்தான் அப்படியென்றால், மக்கள் மன்றத்தில் பேசும்போது நான் என்ன பேசினேன்? ‘நான் ஹிட்லர்’ என்று நான் சொன்னேன். சரி, அவர்தான் ஹிட்லர் மாதிரி இருக்கிறார் என்றால், அவருடன் இருக்கிற அமைச்சர்கள் எல்லாம் கோயபல்ஸ் மாதிரி ஆளாளுக்கு ஒரு பொய் சொல்வதைத்தான் வேலையாக வைத்திருக்கிறார்கள் என்று நான் சொன்னேன். நேற்று நான் என்ன பதிவு போட்டேன்? 1,200 கோடி ரூபாய்க்கு நீங்கள் புதிய தலைமைச் செயலகம் கட்டுகிறீர்கள். ‘கஜானா காலி, கஜானா காலி’ என்று சொல்கிறீர்கள். ஆனால் கலைஞர் கொண்டு வந்து கட்டிய அந்த தலைமைச் செயலகம், இன்று மருத்துவமனையாக முழுமையாக பயன்பாட்டில் இல்லாமல் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதை சில கோடிகள் நீங்கள் செலவு செய்தாலே, அதையே நீங்கள் வந்து தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தினால், எதற்காக இந்த 1,700 கோடியில் ‘கஜானா காலி, கஜானா காலி’ என்று சொல்லிக்கொண்டு நீங்கள் கட்டுகிறீர்கள் என்ற கேள்வியைக் கேட்டேன். அது மட்டுமல்ல, திணிக்கப்பட்ட ஒரு இடைத்தேர்தலாக இருக்கக்கூடிய தேர்தல் தொடர்பாகவும் நான் பேசினேன். நேற்று நான் தாராபுரத்திற்கு சென்றேன். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எனக்கென்று சில பூத்துகளை ஒதுக்கி இருக்கிறார்கள். தாராபுரத்திற்குச் செல்லும்போது நான் என்ன சொன்னேன் என்றால், ‘இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, ஆளுங்கட்சியினுடைய முகத்தில் கரியைப் பூசுகின்ற வெற்றியாக இது அமைந்திட வேண்டும்’ என்று நான் பேசிவிட்டு வந்தேன். இப்படி எல்லாம் நாங்கள் பேசும்பொழுது, ஏதோ ஒரு விதத்தில் ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, ஒரு சந்தேகத்தின் பேரில் நாங்கள் வருகிறோம் என்பதற்காக, ஒரு மடைமாற்றம் பண்ற மாதிரியான ஒரு வேலைதான் தொடர்ந்து ஒரு டைவர்ஷன் வேலையை நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். 18ஆம் தேதி 11 மணிக்கு எழுதி வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் சொன்ன அதே டைமில் நான் ஆஜராகி, நீங்கள் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, அடுத்த நிமிஷம் நான் திருச்சிக்குக்கூட வரமாட்டேன். நேராக அங்கேயும் தாராபுரம்தான் நான் போவேன்.
எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற, எங்களுடைய மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்ற அந்தப் பணியில் நான் முழுமையாக ஈடுபட்டு, கண்டிப்பாக இந்த தாராபுரம் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றியை நிலைநாட்டுவோம் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்குப் பிறகு யார் யார் இந்த சர்ச் வாரண்ட் பண்றாங்க, இதற்குப் பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறீர்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அவர்களுக்கெல்லாம் காலம் வரும்பொழுது கண்டிப்பாக நாங்கள் ஒரு மிகப்பெரிய பதிலைச் சொல்ல நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆக, இந்த மாதிரியான சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். ஏனென்றால், எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகம் வந்து ஏதோ நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த இயக்கம் கிடையாது. 77 ஆண்டு காலம் பழமை வாய்ந்த ஒரு இயக்கம். பல நல்லதுகளை இந்த நாட்டு மக்களுக்காக செய்த இயக்கம். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து நாங்கள் பணியாற்றுவோம். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் பணியாற்றுவதற்கு திமுக தொண்டர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)