Politics
எது பீட்ரூட் ராய்த்தா.. பீன்ஸ் பொரியலா? விமர்சிக்கப்படும் BRICS Dinner.. சாப்பிடாமல் போன தலைவர்கள்!

புது டெல்லியில் நடந்த 18வது பிரிக்ஸ் மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு முழுக்க சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்ட இரவு விருந்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவின் உணவுப் பன்முகத்தன்மையை மறைக்கும் முயற்சியாக இது விமர்சிக்கப்படுகிறது. 80% இந்தியர்கள் அசைவம் உண்பவர்கள் என ராகுல் காந்தி குற்றம் சாட்ட, பவன் கேராவும் பாஜக மீது கடும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
புது டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொண்ட உலகத்தலைவர்களுக்கு முழுவதும் சைவ உணவுகள் அடங்கிய விருந்து கொடுக்கப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது. ‘இந்தியாவின் உணவுப் பண்பாட்டை வெறும் சைவ உணவுப் பட்டியலுக்குள் சுருக்கிவிடாதீர்கள் என்றும், இந்தியாவின் விருந்தோம்பல் இப்படி இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இந்தியாவின் பன்முகத்தன்மை மொழிகளிலும் கலாச்சாரங்களிலும் மட்டும் இல்லை, அது விருந்தோம்பலிலும் இருக்கிறது என்றும் கடுமையான எதிர்வினைகள் வைக்கப்பட்டு வருகின்றன..
இந்தியா தலைமையில் 2 நாட்கள் நடைபெற்ற 18ஆவது பிரிக்ஸ் மாநாடு சனிக்கிழமை அன்று புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஈரான் மசூத் பெசஸ்கியான் மற்றும் பிரேசில், எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிரிக்ஸின் கூட்டமைப்பு நாடுகளை சேர்ந்த பல உலகத்தலைவர்கள் பங்கேற்றனர்.
உறுப்பு நாடுகள், கூட்டளி நாடுகள் என மொத்தம் 21 நாட்டின் தலைவர்கள் பங்கேற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க மாநாட்டில், உலகத்தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் இரவு விருந்து பேசுபொருளாக மாறியுள்ளது. இதில் முழுக்க பனீர், காளான்கள், தினை புலாவ் மற்றும் பீட்ரூட் ராய்தா, கேரட் பீன்ஸ் பொறியல் உள்ளிட்ட சைவ உணவுகளே பரிமாறப்பட்ட நிலையில், இந்தியா ஒரு வளமான, பன்முகத்தன்மை வாய்ந்த, பலவகை உணவு வகைகளைக் கொண்ட நாடு. உலகெங்கிலும் உள்ள மக்கள் விரும்பி உண்ணும் மிகச்சிறந்த அசைவ உணவு வகைகளுக்கு இது தாயகமாக விளங்குகிறது. அப்படியிருக்க, மோடி அரசு ஏன் இந்தியாவின் கலாச்சாரத்தின் இந்தப் பகுதியை மறைக்க நினைக்கிறது? என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி, “80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்... இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை. இது என் சகோதரி செய்த சோலா பட்டுரே (CHOLA BHATURE) ” என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு விமர்சித்திருந்தார்.
அதேபோல காங்கிரஸ் எம்.பி. பவன் கேரா, “சக இந்தியர்கள் மீது தனது உணவு விருப்பங்களைத் திணிக்கும் பாஜகவின் பழக்கம் ஏற்கெனவே மிகவும் சிக்கலானது. இப்போது, அவர்கள் உலகெங்கிலும் உள்ள பிரமுகர்கள் மீதும் தங்களது சொந்த விருப்பங்களைத் திணிப்பதன் மூலம் அதை ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளனர்” என விமர்சித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னர் பாரக் ஒபாமாவிற்கு அளிக்கப்பட்ட இந்திய விருந்தில் சைவம் மற்றும் அசைவ உணவுகள் இரண்டுமே இருந்தன என சுட்டிக்காட்டப்படும் அதேவேளையில், மோடியின் மிக முக்கியமான விருந்தினர்களான சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஆகியோர், மோடி கட்டாயப்படுத்திய சைவ இரவு விருந்தைத் தவிர்த்தனர், என்னவொரு அவமானம் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இதற்கு பாஜக தரப்பில் காங்கிரஸ் உணவிலும் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டதாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.