Politics
முழுக்க முழுக்க சைவ உணவுகள்; நரேந்திர மோடியின் விருந்தை புறக்கணித்த சீன அதிபர்

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க, அந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்தனர். குறிப்பாக, சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இதில், சீன அதிபர் ஷி ஜின்பிங், மாநாட்டில் பங்கேற்றதுடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் வர்த்தகம் குறித்துப் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பாக கடந்த சனிக்கிழமை இரவு டெல்லியில் விருந்து அளிக்கப்பட்டது. அந்த விருந்தில் சைவ உணவு வகைகள் மட்டும் பரிமாறப்பட்டது. அதனால், இந்த விருந்தில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது அக்கியோர் கலந்துகொள்ளாமல் தவிர்த்தனர். சைவ உணவு மட்டுமே பரிமாறியதால் அவர்கள் இந்த விருந்தை புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து, இது சம்பந்தமாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாஜவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ராகுல் காந்தி தனது சமூகவலைத்தளத்தில், “இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். இந்திய அசைவ உணவுகள் சுவையானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல, காங்கிரஸ் எம்.பி. பவன் கேரா, ”உலக நாடுகளின் தலைவர்களிடம் தங்களது சைவ உணவுப் பழக்கவழக்கங்களைத் திணிப்பதன் மூலம் பாஜக தனது வழக்கத்தை ஒரு படி மேலே எடுத்துச் சென்றுள்ளது” என்று விமர்சித்துள்ளார். மேலும் சிலர், சைவ உணவுப் பழக்கம் உடையவரான நரேந்திர மோடி, இந்துத்துவாவின் உணவுப் பழக்கமான சைவத்தை ஒட்டுமொத்த இந்தியர்களின் உணவுப் பழக்கமாக உலகிற்குக் காட்ட முயல்கிறாரா? எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதனிடையே, நீண்ட நேரப் பயணத்தினால் ஏற்பட்ட களைப்பினால் ஓய்வு எடுப்பதற்காகச் சென்றுவிட்டதால், அவர்கள் விருந்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதாக பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)