Lifestyle and human interest
75 ஆண்டுகளை கடந்து வெற்றிநடை போடும் தினமலர்: சிறப்பு தபால் தலை வெளியிட்டார் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

சென்னை:''ஏழு நுாற்றாண்டுகள் கடந்தாலும், தமிழர்களின் உள்ளத்தில், 'தினமலர்' நாளிதழ் மகத்தான இடத்தை பெற்றிருக்கும்; இது மங்காத இடமாக இருக்கும்,'' என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.
கடந்த 1951ம் ஆண்டு, செப்டம்பர் 6ம் தேதி, திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்ட 'தினமலர்' நாளிதழ் இன்று, 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அதை முன்னிட்டு, நினைவு தபால் தலை வெளியீட்டு விழா, சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அரங்கில், நேற்று மாலை 4:55 மணிக்கு நடந்தது.
பவள விழா நினைவு தபால் தலை மற்றும் முதல் நாள் அஞ்சல் உறையை, துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். 'தினமலர்' கோவை பதிப்பு வெளியீட்டாளர் எல்.ஆதிமூலம், துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார். சென்னை நகர மண்டல அஞ்சல் துறை இயக்குநர் மேஜர் மனோஜுக்கு, 'தினமலர்' வேலுார் பதிப்பு வெளியீட்டாளர் ஆர்.ஆர்.கோபால்ஜி சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார். அதைத் தொடர்ந்து, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆற்றிய சிறப்புரை:
ஒரு பத்தரிகை நடத்துவதே கடினம்; அதை நடுநிலையோடு நடத்துவது அதை விட கடினம். தினமலர் நாளிதழை உண்மையின் உரைகல் என்று சொல்கிறோம். அது உண்மைதான் என்று பறைசாற்றும் விதமாக, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், ஒரே அணியாக இங்கே அமர்ந்திருக்கின்றனர். எழுபத்தி ஐந்து ஆண்டுகள் ஓயாமல், உண்மையின் குரலாக ஒலிப்பது, நடைமுறையில் எவ்வளவு கடினம் என்பது எல்லாரும் அறிந்த ஒன்று. அப்படி உழைக்கிறபோது, அந்த உழைப்பு வரலாறாக மாறுகிறது. 'தினமலர்' சிறப்பு தபால் தலையை வெளியிட்டு, உங்களுடன் கருத்துகளை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
'காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீதான்... இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில் பாய்ந்திடும் எழுச்சி நீதான்... ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்ணே!' என்று பத்திரிகைகளை போற்றி, பாரதிதாசனார் பாடினார். அந்த இலக்கணத்திற்கு சொந்தமாக தினம் தினம் பூக்கும் மலராக, 'தினமலர்' இருப்பது நம் தமிழுக்கு பெருமை.
உண்மையின் உரைகல்லாக திகழ வேண்டும் என்ற உறுதியோடு, 1951ல் ஆரம்பிக்கப்பட்டு, 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சிலர் பிறந்து வளர்ந்து போராளிகளாக மாறுவர்; சிலர், பிறக்கும் போதே போராளியாக இருப்பர். 'தினமலர்' பிறந்த இடத்திலேயே, பிறந்த இடத்திற்கு எதிராக போராடிய பத்திரிகை.
திருவனந்தபுரத்தில் தொடங்கினாலும், அந்த சமஸ்தானத்தின் சில பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று போராடிய போராளியாக டி.வி.ராமசுப்பையர் இருந்திருக்கிறார். அதுதான் இன்று வரை, எதற்கும் அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும் என்ற உணர்வை, மகத்தான உத்வேகத்தை தினமலர் நாளிதழுக்குத் தந்திருக்கிறது என்றுகருதுகிறேன்.பிறக்கும்போதே சிலர் மகத்தான ஆசியோடு பிறக்கின்றனர். நம் தினமலர் நாளிதழும் அப்படித்தான் பிறந்திருக்கிறது. வரவேற்புரையில், தேசியமும் தெய்வீகமும் என்று குறிப்பிட்டனர். தேசியமும், தெய்வீகமும் நமது இரு கண்கள் என்று உணர்த்தியவர் பசும்பொன் முத்துராமலிங்கம் ஐயா. அவருக்குப் பின், அதை இந்த மண்ணில் நிலைநிறுத்தும் மகத்தான கடமையை, தினமலர் செய்து வருகிறது.தாய், தாய்மொழி, தாய் நாடு மூன்றும் யாரும் எந்த நேரத்திலும் விட்டு கொடுக்கக் கூடாத உணர்வுகள். தாயை, தாய்மொழியை யாரும் பழிப்பதில்லை. தாய்நாட்டை போற்றி புகழ்ந்தால்தான், தாயை, தாய்மொழியை பாதுகாக்க முடியும்.'வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்; மற்றைய எல்லாம் பிற' என்கிறார் வள்ளுவர். உறுதியான செயல்களை செய்ய, செய்பவரின் மன உறுதியே ஆதாரமாக அமைகிறது. யார் ஒருவனிடம் மன உறுதி இருக்கிறதோ, அவன் உண்மைக்கும், தர்மத்திற்கும் மட்டுமே பயப்பட வேண்டும். உலகில் வேறு எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
திருவனந்தபுரத்தில் தொடங்கினாலும், திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, சென்னை, வேலுார், கோவை, புதுச்சேரி, பெங்களூரு, புதுடில்லி ஆகிய நகரங்களில் இருந்து, தினமலர் வெளி வருகிறது. மேலும், 140 நாடுகளில் உள்ள தமிழர்கள் வாசிக்கும் நாளிதழாக தினமலர் உள்ளது. தேசத்தின் தென்கோடியில் தொடங்கப்பட்டு இருந்தாலும், தலைநகர் டில்லியில் தமிழர்கள் படிக்கும் முதல் நாளிதழாக, தினமலர் உள்ளது.
உண்மையை உரக்கச் சொல்வதுதான் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். எந்த இடத்திலும், யார் தவறு செய்தாலும், அதை துணிந்து தவறு என்று கூறுவது தான் பத்திரிகை தர்மம். பத்திரிகை லாபகரமாக நடக்க வேண்டும். அப்போதுதான் காலத்தை கடந்து வெற்றிகரமாக நடத்த முடியும். ஆனால், லாபகரமாக நடத்த, பல்வேறு விதமாக சமரசம் செய்து கொள்ளாமல், தான் கொண்ட நிலைப்பாட்டில் நின்று, உண்மையை உரக்கச் சொல்வதோடு, தன்னையும் நிலைநிறுத்தும் பத்திரிகையாக, தினமலர் இருப்பது பாராட்டுக்குரியது.
டி.வி.ராமசுப்பையர் மனதில் உதித்த மகத்தான சிந்தனை, இன்று எத்தனையோ நிருபர்களை, ஊழியர்களை உள்ளடக்கிய மிகப் பிரமாண்டமான அமைப்பாக வளர்ந்திருக்கிறது. 8 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்படும் நாளிதழான தினமலர், உண்மையும், நேர்மையும் அடித்தளமாக இருந்தால், உழைப்பு எந்த உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதற்கு மகத்தான உதாரணம். அடுத்த தலைமுறைக்கான வாசல்களை திறந்தால் மட்டுமே, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மலரும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அடுத்த தலைமுறை பள்ளி மாணவர்களுக்கு, பொது அறிவு, மொழித்திறன், அறிவியல் பற்றிய புதுமைகளை, 'தினமலர் - பட்டம்' இதழ் கொண்டுச் சேர்க்கிறது.
'தினமலர்' தினம் தினம் பூக்கும் புதுமலர். பல்வேறு கருத்துகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அது ஒருநாள் தினமலர் நாளிதழில் செய்தியாக வரும். அதுதான் அதற்கு மேலும் மேலும் சிறப்புகளை சேர்த்து வருகிறது. எந்த அரசியல் கட்சிக்கு எதிராக எழுதினாலும், அவர்கள் ஆட்சிக்கு வந்த பின், முதல் நடவடிக்கையாக, விளம்பரங்களை தர மாட்டார்கள். அதையும் தாண்டி, ஒரு பத்திரிகை உண்மையை உரக்கச் சொல்கிறது என்றால், அதில் தான் தர்மம், வாய்மை, தியாக மனப்பான்மை இருக்கிறது. பத்திரிகைப் பணி என்பது தொழிலோ, வியாபாரமோ அல்ல.
அது உண்மையைப் பாதுகாப்பதற்கான தர்மயுத்தம் என்று சொல்வர். இன்று, பத்திரிகை அச்சிடும் செலவில், பாதி விலைக்குதான் விற்கின்றனர். விளம்பரங்கள் இல்லாமல் பத்திரிகை நடத்துவது சாத்தியமில்லை. ஆனாலும், அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல், உள்ளதை உள்ளபடி உரத்த குரலாக ஒலிப்பது மகத்தான பொதுச்சேவை; அதை செய்வது, தினமலர் என்பதில் நம் எல்லாருக்கும் பெருமை.
என் வாழ்வில், 40 ஆண்டுகளாக தினமலர் நாளிதழோடு தொடர்பில் இருக்கிறேன். நான் சார்ந்திருந்த இயக்கத்தைப் பற்றி செய்திகள் பெரும்பாலும் வராது. அப்போது மிகச்சிறிய இயக்கம். ஆனால், தினமலர் நாளிதழில் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக வரும். சொல்பவர்கள் மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்றிருக்காத காலத்தில் கூட, சொல்வதில் உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற உணர்வோடு, தினமலர் இருந்ததே அதற்கு காரணம்.
நான் சார்ந்திருந்த அரசியல் இயக்கத்தின் பொதுக்குழு, செயற்குழு, திருப்பூரில் நடந்தது. ஏற்பாடுகளை கவனித்து விட்டு, மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அங்கு வந்த, தினமலர் நிருபர் ரமேஷ், 'அண்ணா நீங்கள் தான், கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட போகிறீர்கள்' என்றார்.
இதை முதல்முறையாக, தினமலர் நிருபர் வாயிலாகவே அறிந்து கொண்டேன். அடுத்த நாள் படத்துடன் நான் வேட்பாளர் என்ற செய்தியை வெளியிட்டிருந்தனர். நான் தான் வேட்பாளர் என்பது எனக்குத் தெரியாது; தினமலர் நிருபருக்குத் தெரிந்திருக்கிறது. நம்மிடம் தர்மமும், வாய்மையும் இருக்கும்போது, உலகில் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை. எத்தனையோ தலைவர்கள் இருந்தனர்; மறைந்திருக்கின்றனர்.
எம்.பி.,யாக, எம்.எல்.ஏ.,வாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவருக்கு, மக்கள் தாமாகவே முன்வந்து விழா எடுக்கின்றனர். சொல்லப் போனால் அந்த விழாவிற்கு வர, அரசு தடை போட்டது. அப்படி உண்மைக்காக, தேசியத்திற்கும், தெய்வீகத்திற்காகவும் உழைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
அதே வழியில், அதே உறுதியான நெஞ்சுத்துடன் தமிழ் மண்ணில் பணியாற்றுவது பெருமையிலும் பெரும். பல்வேறு தேர்தல்களில் தமிழகத்தில் தேசியம், தோல்வியை தழுவிக் கொண்டிருந்தாலும், அதையும் தாண்டி தேசிய உணர்வு இன்றும் மங்காமல் இருப்பதற்கு, தினமலர் முக்கிய காரணம்.
இது காலத்தை கடந்த வெல்லும் என்பதில், எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. 75 ஆண்டுகள் அல்ல; ஏழு நூற்றாண்டுகள் கடந்தாலும் தமிழர்களின் உள்ளத்தில், தினமலர் மகத்தான இடத்தை பெற்றிருக்கும்; அது மங்காத இடமாக இருக்கும் என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீவிதுசேகர பாரதி சுவாமிகள் ஆகியோரது ஆசியுரை, பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் வாழ்த்து செய்திகளை, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரங்கராஜ் பாண்டே வாசித்தார்.
'தினமலர்' நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 6.9.1951 தலையங்கம்
மக்கள் இன்னல்கள் நீங்கி, இன்ப நிலை அடைவதற்கு எமது சக்திக்கு இயன்ற அளவு தொண்டாற்றும் ஒரே நோக்கத்துடன், 'தினமலர்'ப் பத்திரிக்கையைத் தொடங்கியிருக்கிறோம். மக்கள் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்ற சபதத்தை மனதில் நிறுத்தி இப்புது முயற்சியில் இறங்கியிருக்கிறோம். 'தினமலர்' பத்திரிகையை எந்த அரசியல் கட்சியுடனும் சார்பு கொள்ளாத வகையில் சுயேச்சையாக நடத்த முற்படுவதால், எந்த அரசியல் கட்சிக்கும், 'தினமலர்' விரோதி என்று அர்த்தமாகாது. எல்லா கட்சியினரும் தத்தம் அபிப்பிராயங்களைக் கண்ணியமான முறையில் தெரிவிக்க, 'தினமலர்' இதழில் எப்போதும் இடமுண்டு. ஜன சமூகத்திற்குத் தீங்கு இழைப்போர் யாராக இருந்தாலும் சரி... அவர்களை வன்மையாகக் கண்டிப்பதில், 'தினமலர்' சற்றும் தயங்காது.
வகுப்புவாதிகள், மதவெறியர்கள், பிற்போக்குக் கும்பல்கள், குழப்பங்கள் உண்டுபண்ணுபவர்கள், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் நய வஞ்சகர்கள், தமிழினத்திற்கு துரோகம் செய்யும் கோடாலிக் காம்புகள், இத்யாதி கோஷ்டிகள் அத்தனை பேரும் எமது விரோதிகள்!