Politics
மதுராந்தகம், தாராபுரம்: இடைத் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்த அதிமுக – இரண்டிலும் பெண் வேட்பாளர்கள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல் வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் மீதான தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்துள்ளது.
இதில், திமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், தவெக சார்பில் ஏற்கனவே அந்தத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் யார் எனும் எதிர்பார்ப்பு எழுந்துவந்த சூழலில், அக்கட்சி அதன் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி, தாராபுரத்தில் பானுமதி, மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத் ஆகியோர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தவெகவும், அதிமுகவும், இரண்டு தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. இந்தத் தொகுதிகளில் ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்றதன் காரணமாக மேலும், இடைத் தேர்தல் பெரும் ஆவலை உருவாக்கியுள்ளது.
தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. வரும் 16ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், 9ஆம் தேதி தேர்தல் முடிவுகளும் வெளியாக இருக்கின்றன.
