Arts, culture, entertainment and media
காட்டுக்குள் இருவர் சாவில் நீடிக்கிறது மர்மம் பிரேத பரிசோதனை முடிந்தும் போலீசார் மழுப்பல்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே சின்னமாயாகுளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோபி 35, ரியாசுதீன் 55. இருவரும் கூலிதொழில் செய்தனர். ஊரின் அருகே உள்ள சீமைக்கருவேல காட்டுப் பகுதியில் இருவரும் நேற்று முன்தினம் மது அருந்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரே இடத்தில் இருவர் இறந்து கிடந்ததால் கொலையா அல்லது மதுவால் ஏற்பட்ட மரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
அவர்களுடன் மது அருந்தும் அதே ஊரை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இருவரின் இறப்பை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா எனத் தெரிய வரும். அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அறிவுறுத்தியதின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகும் போலீசார் இறப்பிற்கான காரணத்தை வெளியிடவில்லை. இதுகுறித்து எஸ்.பி., சந்தீஷிடம் கேட்ட போது தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார்.