Arts, culture, entertainment and media
ஏர்வாடி காட்டுப்பகுதியில் மது அருந்திய இருவர் படுகொலை; உறவினர்கள் மறியல் போராட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் மது அருந்திய இருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஏர்வாடி தர்கா அருகே உள்ள சின்னமாயாகுளம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் கோபி 35, கணேசன் என்ற ரியாசுதீன் 55. இருவரும் கூலித் தொழிலாளர்கள்.
நேற்று முன்தினம் இரவு வெளியே சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை. நேற்று காலை ஊர் அருகில் உள்ள சீமைக்கருவேல காட்டுப் பகுதியில் இறந்து கிடந்தனர். ஏர்வாடி போலீசார் உடல்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இருவரின் கண் மற்றும் மூக்கில் ரத்தம் கசிந்திருந்தது. முகம், உடலில் மண் படிந்த நிலையில் இறந்து கிடந்தனர். அருகில் காலி மது பாட்டில்களும் கிடந்தன. இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன் மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து எஸ்.பி., சந்தீஷ் கூறுகையில், உயிரிழந்த இருவரின் உடலில் வெட்டுக்காயங்கள் இல்லை. அதனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும். இருப்பினும் 4 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கப் படுகிறது என்றார்.
