Politics
தீவிர சிகிச்சையில் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு; மருத்துவமனையில் இருந்து வந்த தகவல்!

சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வரும் சூழ்நிலையில், இன்று அதிகாலையில் வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஐ.சி.யூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவருக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவருக்கு தேவையான, பொறுத்தமான மற்றும் மருத்துவ மேலாண்மை சுவாச ஆதரவு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் வி.எஸ்.பாபுவுக்கு வயது 75 என்பதால் வயது மூப்பு காரணமாக மூச்சுத் திணறல் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், அவருடைய உடல்நிலை நல்ல முன்னேற்றமடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)