Politics
மாணவர்கள் இடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

புதுடில்லி: “மாணவர்களிடையே போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,” என, தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்., 5, ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுதும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்தாண்டு தேசிய விருதுக்கு தேர்வான ஆசிரியர்களை, டில்லியில் உள்ள தன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுடன் கலந்துரையாடினார்.
தங்கள் அனுபவங்கள், கற்பித்தல் முறைகள், மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் திறன்களை வளர்க்க தாங்கள் மேற்கொள்ளும் அணுகுமுறைகளை பிரதமருடன் ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
சமீபகாலமாக, குழந்தைகள், ‘ஸ்கிரீன் டைம்’ எனப்படும், ‘டிவி, மொபைல் போன்’ ஆகியவற்றின் திரையைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதை தடுப்பது ஆசிரியர்களின் கடமை. குழந்தைகள் திரையைப் பார்ப்பதை குறைத்தால், அவர்களால் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும். இந்த விளையாட்டு, ‘வீடியோ கேம்’ பற்றியது அல்ல; மைதானத்தில் களமிறங்கி விளையாடும் ஆட்டத்தை பற்றி நான் குறிப்பிடுகிறேன்.
குழந்தைகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும், அவர்களின் ஆர்வங்களை வெளிக்கொணர உதவும் வழிமுறைகளையும் பள்ளிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பான நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்து நடந்த வேண்டும். மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியம்.
மாணவர்களிடம் பயம் அல்லது மாற்றம் தென்படுகிறதா என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களுக்கு அப்பால் சென்று, குழந்தைகளின் வாழ்க்கையுடன் இணைய வேண்டும். குழந்தை பருவம் அழிந்துபோக ஒருபோதும் ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. குழந்தை பருவத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் பணியை ஆசிரியரால் செய்ய முடியும்; அது அவரின் கடமையும் கூட.
இவ்வாறு அவர் பேசினார்.