Politics
"போதைப்பழக்கம், அதிக ஸ்க்ரீன் நேரம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்" – ஆசிரியர்களுக்குப் பிரதமர் மோடி அறிவு...

மாணவர்களின் வாழ்வில் குழந்தைத்தனத்தையும் அவர்களின் இயல்பான தேடலையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே ஆசிரியர்களின் மிகப்பெரிய பங்களிப்பாகும்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, தற்போதைய நவீன சமூகத்தில் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும், அவற்றில் ஆசிரியர்களின் பங்கு குறித்தும் பிரதமர் மோடி விரிவாகப் பேசினார்.
அப்போது, ஆசிரியர்கள் மாணவர்களின் பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்களைத் தாண்டி, அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் நடத்தை மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். கூட்டுக்குடும்ப முறை குறைந்து வரும் சூழலில், மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பெருநகரங்கள் மற்றும் பெரிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் எவ்வாறு போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை நேரடியாகக் கண்டறிவது கடினமாக உள்ளது. யார் மூலமாக இது பரவுகிறது என்பதை அறிவது சிரமம் என்பதால், ஆசிரியர்கள் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏதேனும் ஒரு மாணவனின் நடத்தையில் திடீர் மாற்றம் தெரிந்தால் உடனடியாக அதைக் கண்டறிந்து உதவ வேண்டும் என மோடி வலியுறுத்தினார்.
மாணவர்கள் மொபைல் மற்றும் டிஜிட்டல் திரைகளில் அதிக நேரத்தை வீணடிப்பதை ஒரு நவீன அடிமைத்தனமாகச் சுட்டிக்காட்டிய பிரதமர், அதைக் குறைக்க ஆசிரியர்கள் பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார். திரைப் பயன்பாட்டைக் குறைக்க மாணவர்களை மைதான விளையாட்டுக்கள், உடற்பயிற்சிகள் மற்றும் கலை சார்ந்த படைப்பாற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி "ஒரு மாணவனின் குழந்தைத்தனம் இறந்துவிட நீங்கள் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் வாழ்வில் குழந்தைத்தனத்தையும் அவர்களின் இயல்பான தேடலையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே ஆசிரியர்களின் மிகப்பெரிய பங்களிப்பாகும்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தேசியக் கல்விக் கொள்கையைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், மாணவர்களை வகுப்பறைகளுக்கு வெளியே அழைத்துச் சென்று நடைமுறை வாழ்க்கைத் திறன்களையும், அனைத்து தொழில்களையும் மதிக்கும் உழைப்பின் கண்ணியத்தையும் கற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
