Politics
2 தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! தவெகவுக்கு ஆதரவு அளிப்பதில் கம்யூ., குழப்பம்

சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கான தி.மு.க., வேட்பாளர்களை நேற்று, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். மதுராந்தகத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., பரந்தாமன், தாராபுரத்தில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடுகின்றனர். ஆளும் கட்சியான த.வெ.க.,வுக்கு ஆதரவு அளிப்பதில், கம்யூனிஸ்ட் கட்சிகள் குழப்பத்தில் இருக்கின்றன.
தமிழகத்தில் ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றில் தேர்தல் வழக்கு இல்லாத, மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும், தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலை அறிவித்து உள்ளது.
இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருப்பதால், தி.மு.க., சார்பில், இரண்டு தொகுதிகளுக்கும் நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கவுள்ள மதுராந்தகம் தனி தொகுதி இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவுடன், தி.மு.க., சட்டத்துறை இணைச் செயலர், வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், தாராபுரம் தனி தொகுதியில் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலையில், சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில், எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி, பொதுச்செயலர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனையை முடித்து, கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு வந்தார். அங்கு மீண்டும் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்த பின், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
மதுராந்தகம் வேட்பாளர் பரந்தாமன், தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் பதவி வகிக்கிறார். முன்னாள் எம்.எல்.ஏ.,வான அவருக்கு, கடந்த சட்டசபை தேர்தலில், எழும்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது இடைத்தேர்தல் வேட்பாளராக பரந்தாமனை அறிவித்ததும், ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.
த.வெ.க., ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லி வெற்றி பெறுவேன். த.வெ.க., அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தி.மு.க., ஆட்சியில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம் என, சொல்லி வருகின்றனர். அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடையவில்லை. விலைவாசி அதிகரித்து விட்டது. மின் கட்டணம் அதிகமாக உயர்ந்திருக்கிறது.
முதியோர் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை. விதவையர் உதவித்தொகை பலருக்கு கிடைக்கவில்லை. இதுபோன்ற எண்ணற்ற பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றை வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லி, வெற்றி கனி பறிப்போம். அக்டோபர் முதல் மதுராந்தகம், தாராபுரம் தி.மு.க., தொகுதிகளாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.