Politics
2வது ஏர்போர்ட் அமைக்க செய்யூர், மாநெல்லுாரை பரிந்துரைத்தது தமிழக அரசு
சென்னை: சென்னையின் இரண்டாவது விமான நிலையம், பரந்துாரில் ரத்து செய்யப்பட்ட நிலையில், செங்கல்பட்டில் செய்யூர், திருவள்ளூரில் மாநெல்லுாரில் ஆகிய இடங்களில் அமைக்க, இரண்டு இடங்களை தேர்வு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் இட நெருக்கடி இருப்பதால், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், 5,600 ஏக்கர் பரப்பளவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க, கடந்த தி.மு.க., அரசு முடிவு செய்து, நிலம் கையகப்படுத்துவதற்கான பணியை தொடங்கியது.
இதற்கு, பரந்துார் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில், புதிய அரசு அமைந்தது. இதையடுத்து பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக, ஆக., 24ல் முதல்வர் அறிவித்தார்.
இந்நிலையில், இரண்டாவது விமான நிலையத்திற்காக, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மாநெல்லுார் ஆகிய இரண்டு இடங்களை, தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
இந்த இரு இடங்களிலும், விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு, தமிழக அரசு பரிந்துரைந்துள்ளது.
இந்திய விமான நிலைய ஆணைய குழு, இந்த இடங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். இதற்கு, இன்னும் சில மாதங்கள் வரை ஆகலாம்.
இதில் ஒன்றை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் பரிந்துரை செய்தாலும், அதற்கு மற்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
செய்யூர் வான்பரப்பு, இந்திய விமான படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு, இந்திய பாதுகாப்பு துறை அனுமதி அவசியம். அதேபோல் மாநெல்லுாரில் சில சிக்கல்கள் உள்ளன.
அனைத்து அனுமதிகளும் கிடைத்து, சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டம் முழுமையடைய, ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.