Politics
நெல் விலை உயர்வுக்கு நிதி ஒதுக்காததால் கொள்முதல் நிறுத்தம்: விவசாயிகள் தவிப்பு
சேத்தியாத்தோப்பு, செப். 5– சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டாரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்

சேத்தியாத்தோப்பு சுற்றுவட்டாரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சேத்தியாத்தோப்பு சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை பட்ட நெல் அறுவடை பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதி மாலையோடு நெல் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து கணக்கு முடிக்கப்பட்டது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய விலைக்காக கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி சன்னரக நெல் கிலோவிற்கு ரூ.2.79 பைசாவும், மோட்டா ரக நெல் கிலோவிற்கு ஒரு ரூலாய் உயர்த்தி அரசு அறிவித்தது.
இந்நிலையில், புதிய விலை அறிவிப்பு வந்தும், கொள்முதல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகமும், நுகர்பொருள் வாணிப கழக நிர்வாகமும், கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்களுக்கு போதிய அனுமதி வழங்கவில்லை.
இதனால் சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் கடந்த 26ம் தேதி முதல் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, களங்களில் குவித்து வைத்து விற்பனைக்காக கடந்த 10 நாட்களாக காத்துக் கொண்டுள்ளனர்.
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கேட்டால், புதிய விலையில் நெல் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கவில்லை என்கின்றனர். இது விவசாயிகளை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துள்ள நெல் குவியல்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்கலாம் என்றால் கூடுதல் செலவாகும் என்பதால், விவசாயிகள் செய்வதறியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.
எதிர்பாராத விதமாக திடிரென மழை பெய்தால் கொட்டி குவித்து வைத்துள்ள நெல் குவியல்கள் நனைந்து ஆயிரக்கணக்கான மூட்டைகள் சேதம் அடையும் அபாயம் உள்ளது.
எனவே தமிழக அரசு குறுவை பட்ட நெல்லை முழுமையாக கொள்முதல் செய்வதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய்து, கொள்முதல் பணியை துரிதப்படுத்தி விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும்.