Politics
நேரடி நெல் துாவும் பணியில் விவசாயிகள்

இளையான்குடி: இளையான்குடி தாலுகாவில் விவசாயிகள் மழையை நம்பி நேரடி நெல் துாவும் (விதைப்பு) பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட இளையான்குடி,சாலைக்கிராமம், சூராணம், முனைவென்றி உள்ளிட்ட 55 ஊராட்சிகளைச் சேர்ந்த பகுதிகளில் மிளகாய்க்கு அடுத்தபடியாக நெல் மற்றும் பருத்தி விவசாயம் நடக்கிறது.
பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலமாகவே நெல் விவசாயம் செய்யும் நிலையில் கடந்த வருடம் இப்பகுதியில் போதிய மழை பெய்யாத காரணத்தினால் நெற்பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் கருகி போனதால் விவசாயிகள் நஷ்டத்திற்குள்ளாகினர். இந்த வருடம் ஆடிப்பட்டத்தின் போதும் கடுமையான வெயில் அடித்த நிலையில் ஏராளமான விவசாயிகள் மழையை நம்பி தங்களது வயல்களை உழுது சமன்படுத்தும் பணியை முடித்துள்ள நிலையில் நெல் விதைகளை துாவும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அரியாண்டிபுரம் விவசாயி தமிழரசன் கூறியதாவது:
கடந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் நெல் விவசாயம் செய்த பல விவசாயிகள் நஷ்டத்திற்குள்ளாகினர்.
இந்த வருடமாவது நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் நெல் விதைகளை துாவும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இப்பகுதிகளில் போதிய அளவு பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், வைகை ஆற்றிலிருந்து இந்த வருடமாவது இளையான்குடி பகுதிக்கு வரவேண்டிய தண்ணீர் தங்கு தடையின்றி வந்து சேர்ந்தால் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம் என்றார்.