Lifestyle and human interest
புலியை பிடிக்கும் பணியால் வீட்டில் முடங்கிய மக்கள்: அரசு நிவாரண உதவி வழங்க எதிர்பார்ப்பு

கூடலுார்: கூடலுார் அருகே இருவரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியால், 20 நாட்களாக வீட்டில் முடங்கியுள்ள கிராம மக்கள் அரசின் நிவாரண உதவி எதிர்நோக்கி உள்ளனர்.
கூடலுார் லாரஸ்டன் பகுதியில், 2 பேரை தாக்கி கொன்ற புலியை பிடிக்கும் பணியில், 21ம் தேதி முதல் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது வரை புலி கிடைக்கவில்லை. தற்போது புலியை தேடும் பணியை, ஓவேலியை ஒட்டிய நடுவட்டம், முதுமலை மசினகுடி வன எல்லைகளிலும் வனத்துறையினர் விரிவுபடுத்தி உள்ளனர்.
இந்நிலையில், புலியை பிடிக்கும் பணி தாமதமாகி வரும் நிலையில், லாரஸ்டன் கிராம மக்கள், 20 நாட்களாக வெளியில் பணிக்கு செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இவர்களுக்கு சில தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சியினர் உணவுப்பொருட்கள் வழங்கினர். எனினும், கூலி வேலை செய்யும் பெரும்பாலான மக்கள், அவசர தேவைக்கு கூட பணம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். புலியை பிடிக்கும் வரை, தங்களுக்கு அரசு நிவாரண உதவி தொகை வழங்க வலியுறுத்தியுள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில், ' இப்பகுதியில் உள்ள ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அவர்கள் அறிவுரைப்படி, 20 நாட்களாக பணிக்கு செல்லாமல், எந்த வருவாயும் இன்றி வீட்டில் முடங்கி கிடக்கிறோம். அரசின் நிவாரண உதவியும் கிடைக்கவில்லை. வங்கி மற்றும் பைனான்ஸ் நிறுவனங்களில் தவணை தொகை செலுத்த முடியாமல், அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புலியை பிடிக்கும் வரை மாவட்ட நிர்வாகம், அபராத இன்றி கடன் தவணை தொகையை செலுத்த அவகாசம் பெற்று தருவதுடன், அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.