Politics
மதுராந்தகம் - தாராபுரம் இடைத்தேர்தல்: வரலாறு யார் பக்கம்? - ஆளுங்கட்சிக்கு சவால் விடுக்கும் எதிர்க்கட்சிகள்...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகளின் வரலாறு குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு....
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் தொகுதி 1952ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில், 1962ல் தனித் தொகுதியாக வரையறுக்கப்பட்டது. 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக வென்ற நிலையில், 1967 சட்டப்பேரவை தேர்தலில் திமுக நிறுவனர் அண்ணா தலைமையிலான திமுக முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை 17 முறை சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மதுராந்தகம் தொகுதியில், அதிகபட்சமாக அதிமுக 7 முறை வெற்றி கண்டுள்ளது.
1980, 1989, 1991, 2001, 2011, 2021, 2026 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், 1967, 1971, 1977, 1984, 1996, 2016 ஆகிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது. 1952, 1957, 1962 தேர்தல்களில் தனித்து வெற்றி கண்ட காங்கிரஸ், 2006 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் வெற்றி வாகை சூடியது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் எழில்மலை 62 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜானகி ராமன் வெறும் 4 ஆயிரத்து 950 வாக்குகள் பெற்று கட்டுத்தொகையை கோட்டை விட்டார்.
அதேபோல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி கடந்த 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலையில், 1967ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. முதல் சட்டமன்ற தேர்தல் நடந்த 1951 ஆம் ஆண்டு சுயேட்சை எம்எல்ஏ-வாக வெற்றி பெற்ற நிலையில், அதன்பின் இதுவரை நடந்த 17 சட்டமன்ற தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றன. 1967, 1971, 1989, 1996, 2006, மற்றும் 2021 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் திமுக வெற்றி பெற்ற நிலையில், 1977, 1980, 1984, 1991, 2011, மற்றும் 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது.
இது தவிர 1957, 1962 ஆகிய தேர்தல்களில் தனித்தும், 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. 2001ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமகவும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றது. கடைசியாக 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்று இரண்டாவது இடமும், தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46 ஆயிரத்து 438 வாக்குகள் பெற்று 3வது இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட திவ்யா 6 ஆயிரத்து 26 வாக்குகள் மட்டும் பெற்று கட்டுத்தொகையை இழந்தார். அக்டோபர் 6ஆம் தேதி இவ்விரண்டு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சிக்கு திமுகவும், அதிமுகவும் கடும் போட்டி தரக்கூடும் என்பதால் தேர்தல் களம் அனல் பறக்கக்கூடும்.
