2ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை
உடுமலை: பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும், என தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம், திருப்பூர் மாவட்ட தலைவர் பரமசிவம், தமிழக முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு :
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு, ஆண்டு தோறும், ஆக.,15க்குள் நீர் திறக்கப்படும்; 3ம் மண்டல பாசனத்திற்கு, ஜன., மாதம் திறக்கப்படும்.
பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு முன், கால்வாய்களை துார்வாரவும், மடைகளை அடைப்பது உள்ளிட்ட பராமரிப்பு பணி மேற்கொள்ள, அரசு நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து, திட்டக்குழு, அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பாண்டு, மழைப்பொழிவு குறைந்ததால், பி.ஏ.பி., திட்ட - தொகுப்பு அணைகளில், குறைந்தளவு நீர் உள்ளது.
அதனை, 2ம் மண்டல பாசனத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டு, மூன்று மாதமாக , திட்டக்குழு தலைவர் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும், நிதி ஒதுக்கப்படவில்லை.
தற்போது பாசன பகுதிகளில், கடும் வறட்சி நிலை ஏற்பட்டு, குடிப்பதற்கும், - கால்நடைகளுக்கும், கூட தண்ணீர் இல்லை. தென்னை உள்ளிட்ட நிலைப்பயிர்கள் நீரின்றி, காய்ந்து வருகின்றன.
எனவே, போர்க்கால அடிப்படையில், திருமூர்த்தி அணையிலிருந்து, 2ம் மண்டல பாசனத்திற்கு, நீர் திறக்க வேண்டும். நீர் திறக்காவிட்டால், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளார்.