பி.ஏ.பி. 2ம் மண்டலத்துக்கு நீர் திறக்காவிட்டால் போராட்டம்
திருப்பூர்: பி.ஏ.பி. பாசன கால்வாய்களை துார்வாரி, 2-ம் மண்டலத்துக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் திறக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராகி வருகின்றனர்.
தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது:
பி.ஏ.பி. திட்டத்தில் கால்வாய் துார்வாருதல், 1, 3, 4-ம் மண்டலங்களில் பாசனம் பெறும் மடைகளை அடைத்து பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் ஆண்டுதோறும் ஜூலை மாதத்திலேயே முடிக்கப்படும். அதன் பின்னர் அதிகாரிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி, அணைகளில் உள்ள நீரின் இருப்புக்கு ஏற்ப தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்வர்.
தற்போது மழை குறைவால் தொகுப்பு அணைகளில் குறைந்தளவே தண்ணீர் உள்ளது. அந்த நீரை 2-ம் மண்டலத்துக்கு வழங்க வேண்டும் என திருப்பூர், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், நீர்வளத்துறை செயலர் மற்றும் இரு மாவட்ட கலெக்டர்களிடம் கோரிக்கை விடுத்தோம். கடந்த வாரம் பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டமும் நடத்தினர்.
அப்போது, சில நாட்களில் அரசாணை வெளியிட்டு, குறுகிய கால டெண்டர் மூலம் கால்வாய்களை தூர்வாரி, 2-ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை கால்வாய் துார்வாரப்படவில்லை; தண்ணீரும் திறக்கப்படவில்லை.
பி.ஏ.பி. பாசன பகுதிகளில் குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. தென்னை மரங்களும் காய்ந்து வருகின்றன. எனவே, போர்க்கால அடிப்படையில் திருமூர்த்தி அணையிலிருந்து, 2-ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகள் திரண்டு மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.