Crime, law and justice
“சடலத்தை தூக்கிப்போடு... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ!”
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய ஆறுமுகத்திடம் ஆனந்தன் அனுமதி கேட்டிருக்கிறார்.

கர்ப்பிணியின் உயிருக்கு முதலாளி வைத்த விலை
“என் மனைவி என் கண்முன்னே பேச்சு மூச்சில்லாமல் கிடந்தாள். குழந்தை பாதி வெளியே வந்திருந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. உதவிக்கு யாரும் இல்லை. இப்போது மனைவியும் இல்லை... குழந்தையும் இல்லை...” என்று கூலித்தொழிலாளி ஆனந்தன் கண்ணீர்மல்கத் தெரிவித்தபோது, காவல்துறையினரே கலங்கித்தான் போனார்கள்.
காஞ்சிபுரத்தை அடுத்த சிங்காடிவாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்தன். மரம் வெட்டும் தொழில் செய்துவருகிறார். இவரின் மனைவி தேன்மொழி. நிறைமாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு செப்டம்பர் 8-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காத நிலையில், தேன்மொழியும், வயிற்றிலிருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். இது தொடர்பாக பொன்னேரிக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.
என்ன நடந்தது என்று காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம், மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் இருவரும் விவரிக்கிறார்கள்...
ரூ.20 ஆயிரத்துக்காகத் தடுக்கப்பட்ட மருத்துவ உதவி!
“காஞ்சிபுரத்துக்கு அருகேயுள்ள வண்ணான்தாங்கலைச் சேர்ந்தவர் ஆறுமுகம். விறகு வியாபாரியான இவரிடம் ஆனந்தன், தேன்மொழி, இவர்களின் உறவினர்கள் சில மாதங்களாக மரம் வெட்டும் வேலை செய்து வந்திருக்கிறார்கள். இதற்காக வெள்ளை கேட் பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் கொட்டகை அமைத்துத் தங்கியிருக்கிறார்கள்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய ஆறுமுகத்திடம் ஆனந்தன் அனுமதி கேட்டிருக்கிறார். ஆனால், மரம் வெட்டும் வேலைக்காக ரூ.20 ஆயிரம் அட்வான்ஸ் வாங்கியிருப்பதால், மரங்களை வெட்டி முடித்த பிறகுதான் ஊருக்குச் செல்ல முடியும் என்று ஆறுமுகம் கறாராகக் கூறியிருக்கிறார். இதனால் தேன்மொழியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை.
இந்த நிலையில், செப்டம்பர் 8-ம் தேதி தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் தங்கியிருந்த இடம் காட்டுப்பகுதி என்பதால், அருகில் யாரும் இல்லை. பதறிப்போன ஆனந்தன், தன்னுடைய ஓனர் ஆறுமுகத்துக்கு போன் செய்திருக்கிறார். ஆனால், அவர் போனை எடுக்கவில்லை. வேறு வழியின்றி, வீட்டில் இருந்த விளக்கெண்ணெயைத் தேன்மொழியின் வயிற்றில் தடவியிருக்கிறார் ஆனந்தன். சிறிது நேரத்தில் வலி குறைந்ததாகத் தெரிந்ததால், மரம் வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்குச் சென்றுவிட்டார். வீட்டில் தேன்மொழி மட்டும் தனியாக இருந்திருக்கிறார்.
கதறித் துடித்த கர்ப்பிணி... கேட்க யாருமில்லை!
அப்போது, மீண்டும் தேன்மொழிக்குப் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. வலியால் அவர் கதறித் துடித்த சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. குழந்தை, ஆனந்தியின் வயிற்றிலிருந்து பாதி வெளியில் வந்த நிலையில், தேன்மொழி அதிக ரத்தப்போக்கு காரணமாகப் பேச்சு மூச்சில்லாமல் கிடந்திருக்கிறார். தண்ணீர் குடிப்பதற்காக ஆனந்தன் வீட்டுக்கு வந்தபோதுதான் இந்தக் கொடூரக் காட்சியைப் பார்த்திருக்கிறார். அதிர்ச்சியில் கதறித் துடித்த அவர், உடனடியாக ஆறுமுகத்துக்கு போன் செய்து நடந்ததைத் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தேன்மொழியைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து பொன்னேரிக்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தேன்மொழி, குழந்தையின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் நாங்கள் அங்கு சென்று விசாரித்தோம். அப்போது, தேன்மொழியும் குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தை ஆறுமுகம் மூடி மறைக்க முயன்றது தெரியவந்தது. எங்களின் போராட்டத்துக்குப் பிறகே, ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்தார்கள். பழங்குடியின மக்களின் உழைப்பைச் சுரண்டியதால், பழங்குடியினர் மற்றும் பட்டியல் சாதியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என்றனர்.
“சடலத்தைத் தூக்கிப்போடு... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ!”
பொன்னேரிக்கரை போலீஸாரிடம் பேசியபோது, “ஆனந்தனிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியாக இருந்தன. ‘சரியான கூலியை வழங்காமல் சாராயத்தை வாங்கிக் கொடுத்து, எங்கள் உழைப்பை ஆறுமுகம் சுரண்டிவந்தார். வேலை சரியாகச் செய்யவில்லை என்றால், ஆறுமுகத்தின் ஆட்கள் எங்களை அடித்து உதைப்பார்கள். அதனால்தான், மனைவி பிரசவ வலியால் துடித்தபோதும் அடிக்கு பயந்து வேலைக்குச் சென்றுவிட்டேன். மனைவி இறந்த தகவலை ஆறுமுகத்திடம் சொன்னபோது 2,000 ரூபாயைக் கொடுத்து சடலத்தைத் தூக்கிப்போடச் சொன்னதோடு, ‘இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ’ என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார்’ என்று எங்களிடம் கதறினார். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறோம்” என்றார்கள்.
மருத்துவ வசதிகள் எவ்வளவோ வளர்ந்துவிட்டதாகச் சொல்லப்படும் இந்தக் காலத்திலும், தலைநகர் சென்னைக்கு மிக அருகிலேயே ஒரு தாயும், அவள் வயிற்றில் இருந்த குழந்தையும் மருத்துவ உதவிக்காகக் காத்திருந்தபடியே உயிரிழந்திருப்பது, மனசாட்சியை உலுக்கும் வேதனை.
