Arts, culture, entertainment and media
ஆடை குறித்து விமர்சனம்; கொதித்தெழுந்த ஐஸ்வர்யா லட்சுமி

பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். ’பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவர் திரை ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றார். அதோடு, அவர் நடித்திருந்த ’கட்டா குஸ்தி’, ’மாமன்’, ’கட்டாகுஸ்தி 2’, உள்ளிட்ட படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாகக் கவனம் பெற்று வருகிறார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு நகைக்கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமி அணிந்திருந்த ஆடை சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியது. இதில், பலரும் அவரது ஆடை குறித்து விமர்சித்திருந்தனர். இது குறித்து சமீபத்தில் பேசிய ஐஸ்வர்யா, “கலாச்சாரம் என்பது ஒரு பெண்ணின் உடல் பாகங்களிலோ அல்லது அவர் அணிந்திருக்கும் ஆடையிலோ தான் இருக்கிறதா? நாம் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதிலும் தான் கலாச்சாரம் இருக்கிறது அல்லவா? மேலும், பெண்களைப் பற்றித் தகாத கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது இங்குப் பெரிதளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. ஆனால் பெண்கள் தங்களது உடை, உடலமைப்பு மற்றும் ஆடையின் வடிவம் குறித்து எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்? என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் வெளியான ட்ரோல்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது சம்பந்தமாக ட்ரோலிங் தொடங்கிய முதல் 24 மணி நேரம் நான் அதைச் சிரித்துக்கொண்டே கடந்து சென்றேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இந்த விவகாரம் குறித்து இவ்வளவு பெரிய அளவில் விவாதம் நடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நம்முடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்தோ அல்லது வயதான பெற்றோர்கள் எத்தனை பேர் கைவிடப்படுகிறார்கள் என்பது குறித்தோ ஏன் யாரும் விவாதிப்பதில்லை? எனது ஆடை குறித்து ஏன் இவ்வளவு தீவிரமான விவாதம் நடத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, சமீப காலங்களில் சமூகவலைத்தளத்தில் தொடர்ந்து சிலரால் பெண்களின் ஆடைகள், அவர்களது செயல்பாடுகள் விவாதப்பொருளாக மாற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக நடிகைகளின் உடைகள் மற்றும் அவதூறான கருத்துக்கள் போன்றவை அவர்களது இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதிக்கும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)