Politics
வெளியேற்றம்! -ஈஃபில் டவர் பெண் பணியாளர் விவகாரம்!

பாரிஸின் அடையாளமாகத் திகழும் ஈஃபில் டவர், செப்டம்பர் 7 அன்று திடீரென மூடப்பட்டது. காரணம் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையோ, தொழில்நுட்பக் கோளாறோ அல்ல. அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வேலைநிறுத்தம்.
செப்டம்பர் 5 அன்று குஜராத்தைச் சேர்ந்த இஆடந (போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) அமைப்பைச் சேர்ந்த சுமார் நூறுபேர் கொண்ட குழு ஈஃபில் டவருக்குச் சென்றது. பாரிஸுக்கு வெளியே இஆடந அமைத்துள்ள பிரம்மாண்டமான இந்துக் கோயிலின் திறப்பு நிகழ்ச்சிக்காக வந்திருந்த குழுவினர், அது முடிந்ததும் பாரிஸின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தையும் பார்வையிடச் சென்றிருந்தனர்.
BAPS என்பது சுவாமிநாராயண் மரபைச் சேர்ந்த ஒரு பெரிய இந்து மத அமைப்பு. 18-ஆம் நூற்றாண்டில் சகஜானந்த சுவாமி, அதாவது சுவாமிநாராயண், தொடங்கிய இயக்கத்திலிருந்து உருவான பல அமைப்புகளில் ஒன்றாகும். பாரிஸுக்கு வெளியே அமைக்கப்பட் டுள்ள அதன் பிரம்மாண்டமான கோயிலும் இதன் சர்வதேச வளர்ச்சியின் ஒரு பகுதியாகும்.
பாரிஸ் பயணத்தின்போது, ஈஃபில் டவரைப் பார்வையிட குழுவினருக்கு ஆசை வந்தது. அந்த டவரின் நிர்வாகப் பணிகளில் நிறைய பெண்களும் உண்டு. இந்தக் குழுவோ பெண்களையே கண்ணால்கூட பார்க்கக் கூடாது என விதிமுறைகளை வைத்திருக்கும் குழு. எனவே தாங்கள் வரும்போது, பெண்கள் அங்கே இருக்கக்கூடாதென கோரிக்கை வைத்திருக்கிறது.
இதையடுத்து சில பெண் ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணியிடங்களில் இருந்து மாற்றப்பட்டிருக்கின்றனர். சில பெண் ஊழியர்களுக்குப் பதிலாக ஆண் ஊழி யர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். மேலும், பெண் ஊழியர்கள், அந்தக் குழுவினர் பார்வையிடும் பகுதிகளில் செல்லாமல் இருக்குமாறு நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இதுதான் பிரச்சினையை வெடிக்கச் செய்தது.
"எங்கள் பணியிடத்தில் எங்களை ஏன் ஒதுக்கவேண்டும்?' எனக் கேள்வியெழுப்பியுள்ளனர்.
ஈஃபில் டவர் ஊழியர்கள் மற்றும் தொழிற் சங்கத்தினருக்கு இந்த ஏற்பாடு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு மதக் குழுவின் விருப்பத்துக்காக, பிரான்ஸில் பணியாற்றும் பெண்கள் தங்கள் பணியிடத்தி லிருந்து விலக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத பாலினப் பாகுபாடு என்று அவர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். அதன் உச்சமாக செப்டம்பர் 7 அன்று ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஈஃபில் டவர் அன்று சுற்றுலா பயணிகளுக்கு மூடப்பட்டது. நிர்வாகத்துக்கும் ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து, மறுநாள் டவர் திறக்கப்பட்டது.
ஒரு மதக் குழுவின் வருகை, உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தை ஒரு நாள் மூடுமளவுக்கு சென்றது ஏன்? என்பதுதான் இப்போது பிரான்ஸில் எழுந்துள்ள கேள்வி.
பிரச்சனை பெரிதானதால், சுவாமி நாராயண் தரப்பும் தங்கள் விளக்கத்தைச் சொல்லவேண்டிய தானது. தங்களுடைய குழு மிகப் பெரியதாக இருந்ததால், வழக்கமான பார்வையாளர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக ஈஃபில் டவர் நிர்வாகத்துடன் இணைந்து இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. பெண் ஊழியர்கள் ஈஃபில் டவருக்குள் வரக்கூடாது என்றோ, அவர் களை பணியிடங்களில் இருந்து அகற்றவேண்டும் என்றோ தாங்கள் கோரவில்லை.’இந்த விவகாரத் தால் யாருக்கேனும் மனம் புண்பட்டிருந்தாலோ, அசௌகரியம் ஏற்பட்டிருந்தாலே வருந்து கிறோம்” என்று பல்டியடித்துவிட்டது. அதாவது, நாங்க கேட்கலை, விருந்தினர்களுக்காக அவங் களா பார்த்து இந்த வசதியைச் செய்து தந்தாங்க எனும் பொருளில் விளக்கமளித்துவிட்டது.
பிரான்ஸ் நாடு மதச்சார்பின்மைக்கும் ஆண் -பெண் சமத்துவத்துக்கும் பேர்போனது. எனவே, ஒரு மதக் குழுவுக்கு அசௌகரியம் ஏற் படக்கூடாது என்பதற்காக பெண் ஊழியர்களை வேறிடத்துக்கு அனுப்புவது என்பதை சாதாரண மானதாக மக்களால் பார்க்க முடியவில்லை.
அரசாங்கத்துக்கு எதிராக வலதுசாரிகள் உடனடியாக கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. “வெளிநாட்டு மத அழுத்தங்களுக்கு பிரான்ஸ் அடிபணிகிறது. பிரான்ஸ் தனது சொந்த மதிப்புகளைப் பாதுகாக்கமுடியாத அளவுக்கு அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதா?” என்று அதிபர் இம்மானுவேல் மாக்ரான் மீது வலதுசாரிக் கட்சிகள் விமர்சனங்களை வைத்துவருகின்றன.
இஆடந குழு பாரிஸுக்கு வந்ததே அங்கு அமைக்கப்பட்டுள்ள இவ்வமைப்பின் கோவில் தொடர்பான நிகழ்ச்சிக்காகத்தான். அந்த நிகழ்வுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துச் சொல்லியதுடன், வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறப்பு விழாவில் பங்கேற்கவும் செய்திருக்கிறார். தவிரவும் இந்த சுவாமிநாராயண் அமைப்பும் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைச் சேர்ந்ததுதான்.
இந்தியாவின் செல்வாக்குப் பெற்ற ஒரு இந்து அமைப்பின் மத நடைமுறை பிரான்ஸின் பொதுவெளிக்குள் எவ்வாறு அனுமதிக்கப் பட்டது? பிரான்ஸின் மீது இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறதா?’என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும். கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'- என்றான் பாரதி. நேர்மாறாக, நம் நாட்டு மதரீதியான ஆச்சாரத்தை வெளிநாட்டுக்குக் கொண்டுபோய், அந்நாட்டு அரசியல்வாதிகளை இக்கட்டில் மாட்டிவிட்டு வந்திருக்கிறது இஆடந அமைப்பு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)