Politics
`பெண்கள் இருக்கக் கூடாது...’ - ஈஃபில் டவரில் குஜராத் சாமியார்கள் நிபந்தனை...
மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே, ஈஃபில் டவர் நிர்வாகத்துடன் பேசி, காலை நேரத்தில் அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்தோம்.

பிரான்ஸ் நாட்டிலுள்ள உலகப் புகழ்பெற்ற பாரிஸ் நகரின் தனித்த அடையாளமாக கம்பீரமாக நிற்கும் ஈஃபில் டவர், வெறும் சுற்றுலாத் தலம் மட்டுமல்ல. அது, பிரான்ஸ் நாட்டின் குடியரசு கொள்கைகளான சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றின் உலகளாவிய குறியீடு. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த மதிப்புமிக்க வரலாற்றுச் சின்னத்தில், குஜராத் சாமியார்களால் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
100 சாமியார்கள்!
18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமி நாராயணன் என்ற துறவி ஒருவரின் போதனைகளைப் பின்பற்றிச் செயல்படும், BAPS (போச்சவாசன்வாசி அக்சர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா) என்ற இந்தியாவைச் சேர்ந்த, குஜராத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆன்மிக அமைப்பைச் சேர்ந்த 100 பேர் கொண்ட குழுவினர், பாரீஸின் புறநகர்ப் பகுதியில் தங்கள் புதிய கோயில் ஒன்றைப் பிரதிஷ்டை செய்வதற்காக சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருக்கின்றனர். லண்டன், லாஸ் ஏஞ்சலஸ், சிட்னி உட்பட உலகெங்கிலும் உள்ள முக்கிய நகரங்களில் இந்த அமைப்புக்குக் கோயில்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
`பெண் ஊழியர்கள் பார்வையில்பட வேண்டாம்!’
கடந்த செப்டம்பர் 5-ம் தேதி, BAPS அமைப்பினர் ஈஃபில் டவரைப் பார்வையிடச் சென்றபோது, தாங்கள் பின்பற்றும் மத வழக்கப்படி, பெண்களுடனான தொடர்பைத் தவிர்க்க விரும்புவதாகக் கூறி, ஆண் ஊழியர்களை மட்டுமே பணியமர்த்துமாறு நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஈஃபில் டவரை இயக்கும் SETE என்ற நிறுவனமோ, அந்த வேண்டுகோள் சரியானதா? என்று கூடச் சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டது.
ஒளித்துவைக்கப்பட்ட பெண்கள், வெடித்த போராட்டம்!
இதையடுத்து, BAPS அமைப்பினர் வருகை தந்த அன்று, ஈஃபில் டவரில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் தங்களின் வழக்கமான பணியிடங்களை விட்டு வெளியேறி, தனி அறைகளில் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். குறிப்பாக, அவர்கள் குறிப்பிட்ட பகுதிகளைக் கடந்து செல்லவோ அல்லது நுழையவோ கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அந்தப் பகுதிகளில் எல்லாம் பெண் ஊழியர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.
இந்தச் செயலால் தாங்கள் கடும் அவமானத்துக்கு ஆளானதாக உணர்ந்த பெண் ஊழியர்கள், பிரான்ஸின் அடிப்படை குடியரசு மதிப்பீடான ‘பாலின சமத்துவத்துக்கு’ எதிராக நடந்த இந்த அநீதியைக் கண்டு பொங்கி எழுந்தனர். நிர்வாகத்திடம் பேசுவதற்காகவும், `இந்த நிறுவனத்தில் இனிமேல் எந்தப் பெண் ஊழியரையும் இப்படி நடத்தக் கூடாது’ என்பதை உறுதிசெய்வதற்காகவும் ஒன்று கூடிய ஈஃபில் டவர் ஊழியர்கள், செப்டம்பர் 7 அன்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஈஃபில் டவர் நாள் முழுவதும் மூடப்பட்டது.
கொதித்தெழுந்த பிரான்ஸ்!
இதையடுத்து, பிரான்ஸ் அரசியல் உலகமும் இந்தச் சம்பவத்துக்குத் தன் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தது. `வெளிநாட்டுப் பார்வை யாளர்களின் கோரிக்கைகளுக்காகப் பெண் ஊழியர்கள் ஒதுங்கி நிற்க நிர்பந்திக்கப் படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்று பிரான்ஸ் நாடாளுமன்றத் தலைவர் யேல் பிரவுன்-பிவெட் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார். `பிரான்ஸில் எந்தவொரு கலாசாரமோ அல்லது மத நம்பிக்கையோ பெண்களுக்கான இடத்தை நிர்ணயிக்க முடியாது’ என பிரான்ஸின் முன்னாள் பிரதமர் கேப்ரியல் அட்டால் காட்டமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்.
‘விசாரணை நடத்தப்படும்!’
பெண்களின் இருப்பைக் கட்டுப்படுத்துவதை பிரான்ஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று ஒட்டுமொத்த நாடும் எதிர்வினையாற்றியதைத் தொடர்ந்து, பாரிஸ் மையப் பகுதியின் மேயரும் ஐஃபெல் டவரை இயக்கும் SETE நிறுவனத்தின் தலைவருமான ஏரியல் வேயில், இறுதியில் தனது மவுனத்தைக் கலைத்தார். இந்தச் சம்பவம் முற்றிலும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்குக் காரணமானவர்கள் மீது உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டு இனி இதுபோன்று நிகழாமல் தடுக்கப்படும் என்ற உறுதியையும் அவர் அளித்தார்.
’மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்!’
இந்த நிலையில் BAPS அமைப்பானது எக்ஸ் தளத்தில் செய்தி ஒன்றைப் பதிவிட்டிருக்கிறது. “மற்றவர்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே, ஈஃபில் டவர் நிர்வாகத்துடன் பேசி, காலை நேரத்தில் அங்கு செல்வதற்கு ஏற்பாடு செய்தோம். எனவே, அப்போது ஏற்பட்ட எந்தவொரு மனவருத்தத்திற்கும் சிரமத்திற்கும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பானது, “பரஸ்பர மரியாதை மற்றும் சேவை ஆகிய உலகளாவிய மதிப்பீடுகளை நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறியிருக்கிறது. மொத்தத்தில், ஆன்மிக நம்பிக்கைகளின் பெயரால் பெண்களின் கண்ணியமும், சமத்துவ உரிமைகளும் பலியிடப்படுவதை எக்காலத்திலும் சகித்துக்கொள்ள முடியாது என்பதை, ஈஃபில் டவரில் பணியாற்றும் ஊழியர்களின் உறுதியான போராட்டமும் ஃபிரான்ஸ் அரசின் உடனடி நடவடிக்கையும் மிகத் தீர்க்கமாக உலகுக்கு உணர்த்தியுள்ளன.
வெல்டன்!
