Politics
காஞ்சியில் கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து முளைக்கும் நெல் மணிகள் விவசாயிகள் வேதனை
காஞ்சிபுரம், செப். 8– காஞ்சிபுரம் அருகே காவாந்தண்டலத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல், மழையில்

காஞ்சிபுரம் அருகே காவாந்தண்டலத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல், மழையில் நனைந்து, நெல் மணிகள் முளைத்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
காவாந்தண்டலம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை செய்யப்பட்டு 1 மாதத்திற்கு மேலாகிறது.
விவசாயிகள் தங்களின் நெல் மணிகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். 8 லட்சம் கிலோவுக்கும் மேலான நெல் மணிகள், திறந்தவெளியிலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நெல்மணிகள் சில தினங்களாக, இரவு நேரங்களில் பெய்யும் மழையில் நனைந்து முளைத்து வருகின்றன. கஷ்டப்பட்டு விளைவித்த நெல், கண்ணெதிரே மழையில் நனைந்து முளைத்து வருவதைக் கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில், உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர். சில தினங்களாக இரவு நேரத்தில் பெய்யும் மழையில் நெல் மணிகள் அனைத்தும் நனைந்துவிட்டன.
தார்ப்பாய் போட்டு மூடி வைத்தாலும், அடியில் ஈரம் புகுந்து நெல் மணிகள் முளைத்து வருகின்றன. எனவே, உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து, மழையால் பாதிக்கப்பட்ட நெல்மணிகளையும் கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவாந்தண்டலம் த.வெ.க., நிர்வாகி ஆனந்தகுமார் கூறியதாவது:
கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி, காஞ்சிபுரம் கலெக்டர், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரி என அனைவரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
இன்று, நாளை என இழுத்தடிக்கிறார்களே தவிர, கொள்முதல் நிலையத்தை திறக்கவில்லை. இதனால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது முதற்கட்டமாக அருகில் உள்ள மேல்பேரமநல்லுாரில் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்றார்.