Crime, law and justice
தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்ட டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அளிக்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராமில் (22 கேரட்) தங்க மோதிரம் அளிக்கும் திட்டத்துக்கான டெண்டர் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் கோரியுள்ளது.
ஒரு பைசாவில் தங்க மோதிரம் வழங்க சப்ளை செய்ய முன்வந்த, ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், தங்க மோதிரத்தை செய்து மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என டெண்டர் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால்மார்க் முத்திரைப் பெறுவதற்கு ஒரு நகைக்கு 45 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ள சூழலில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை 4 ஆயிரத்து 465 ரூபாய்க்கு சப்ளை செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கூறியிருப்பது, வணிக ரீதியாக சாத்தியமற்றது. இதை அனுமதித்தால் அந்த நகைகள் தரமானதாக இருக்காது. மேலும் மருத்துவ சேவைக் கழகம், மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்வதில்தான் நிபுணத்துவம் பெற்றது, அந்தக் கழகத்துக்கு தங்கத்தைப் பற்றி என்ன தெரியும் என்று வாதிடப்பட்டது.
விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர் திட்டத்தை எதிர்த்தும், டெண்டரை எதிர்த்தும்தான் வழக்குத் தொடர முடியுமே தவிர, டெண்டர் வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடர முடியாது.
இதையும் படிங்க: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் : ராஜினாமா செய்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பு
இதன்மூலம், அரசுக்குதான் லாபம் வரும் என்றும் ஒருவேளை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏராளமான தங்கம் உள்ளதால் இந்த தொகையை அவர்கள் குறிப்பிட்டிருக்கக்கூடும். நகை தரமாக இல்லாவிட்டால், டெண்டரை அதிகாரிகள் ரத்து செய்வார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.
