Politics
காமராஜர் காலை உணவுத் திட்டம் பள்ளி நேம் போர்டுக்கு நிதியில்லை கல்வித்துறை கைவிரிப்பால் விரக்தி
மதுரை: தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் தொடர்பாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் புதிய 'நேம் போர்டு' வைக்க உத்தரவிட்டுள்ள கல்வித்துறை, அதற்கான நிதி ஒதுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சியில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவருக்கு 37,447 பள்ளிகளில் முதல்வர் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 8 ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தற்போது த.வெ.க., அரசில், 6 முதல் 8 ம் வகுப்பு மாணவருக்கு 15,454 பள்ளிகளில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான துவக்க விழாவை விருதுநகரில் செப்.17ல் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய திட்டத்தின் பெயர் பலகை வைக்க ஒரு பள்ளிக்கு குறைந்தது ரூ.2 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளையும் புதிதாக மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகளுக்கு இரட்டை செலவு ஏற்படும்.
இது குறித்து தலைமையாசிரியர்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியின்போது பெயர் பலகைக்கான செலவை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்றன. தற்போது பெயர் பலகை வைக்கும் செலவை யார் ஏற்பது என்ற விபரம் இல்லை. ஆனால் கட்டாயம் வைத்துவிட்டு அது தொடர்பான புகைப்படங்களை அனுப்பி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இச்செலவை தலைமையாசிரியர் தலையில் கட்டாமல் அரசே ஏற்க வேண்டும் என்றனர்.