Politics
கந்துவட்டி விவகாரத்தில் துணை நடிகர் பிரதீப்ராஜ் கொலை; திருவொற்றியூரில் உறவினர்கள் மறியல்; 4 பேர் கைது
திருவொற்றியூர்: கந்து வட்டிக் காரர்களுக்கு இன்ஸ்பெக்டர் துணைபோகிறார் என பேட்டி அளித்த அடுத்த நாளில், திருவொற்றியூரைச் சேர்ந்த பிரதீப் ராஜ், 29 என்ற துணை நடிகர், வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவொற்றியூர், தேரடி, மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ், 29; துறைமுக ஒப்பந்த பணியாளர். தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், திரைப்படங்களிலும் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டருகே மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
திருவொற்றியூர் போலீசாரின் விசாரணையில், மேற்கு மாடவீதியைச் சேர்ந்த நவநீதம் என்பவரிடம், பிரதீப் ராஜின் தாய் டில்லிராணி வட்டிக்கு பணம் வாங்கி, தனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்துள்ளார்.
சிலர் பணம் கட்ட தவறியதால், நவநீதம் தரப்பினருக்கும் பிரதீப் ராஜ் தரப்பிற்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
நவநீதம் அளித்த புகாரை அடுத்து, திருவொற்றியூர் போலீசார் பிரதீப் ராஜை கைது செய்தனர். பின் ஜாமினில் விடுவித்துள்ளனர். இந்நிலையில் பிரதீப் ராஜ் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, மாதவரத்தில் பதுங்கி இருந்த கொலையாளிகள் நவீன், 32, ஹரிகிருஷ்ணன், 21, ஜாபர், 24, லோகேஷ், 27, என நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பிரதீப் ராஜின் தாய் மற்றும் உறவினர்கள், திருவொற்றியூர் நெடுஞ்சாலை - எல்லையம்மன் கோவில் சந்திப்பில், நேற்று மதியம் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் கைது செய்யப்பட்டவர்களின் விபரத்தை தெரிவித்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விரைவில் கைது செய்யப்படுவர் என, போலீசார் உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
கடந்த 8 ம் தேதி, திருவொற்றியூர் போலீசார், பிரதீப்ஜானை விசாரணைக்கு அழைத்துள்ளனர். பின், பிரதீப் ராஜ், காவல் நிலையம் முன் அளித்த பேட்டி:
என் தாய் வாங்கிய கடனிற்கு, ரவுடிகளை வைத்து மிரட்டுகின்றனர். இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளோம். என் மீதும் பொய் வழக்கு போட்டுள்ளனர். ஆய்வாளர் அழைத்து, 'முன்விரோதம் உள்ளது. நீ எப்படி உயிரோடு இருப்ப பார்க்கிறேன். வெட்டி திருச்செந்துார் கடலில் கரைப்பேன். ரவுடி ராதாவிடம் பேசு. வழக்கறிஞர் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது' என, என்னை திட்டி, தாக்கினர்.
மற்றவர்களுக்கு தான் கடன் வாங்கி கொடுத்தோம்; 30 - 40 பைசா வட்டி கேட்கின்றனர். அதுக்கு இன்ஸ்பெக்டர் துணை போகிறார். முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்திருந்தார்.