Health
‘டெங்கு’ காய்ச்சலை தடுக்க வீடு தோறும் விழிப்புணர்வு
திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சி சார்பில், ‘டெங்கு’ காய்ச்சலை தடுக்க, வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், 3,500க்கும் மேற்பட்ட கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன.
தற்போது, திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மாலை நேரம் மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகளைச் சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
மாலை நேரத்தில் தொடர்ந்து பெய்யும் மழைநீர், வற்றாமல் குளமாக மாறியுள்ளது. மேலும், வீடுகளைச் சுற்றிலும் தேங்காய் ஓடு, காலி டப்பாக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்குகிறது. இந்த தண்ணீரில் கொசு உற்பத்தியாகி வருவதால், மலேரியா, டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து, நகராட்சி கமிஷனர் தாமோதரன் உத்தரவின்படி, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள், அனைத்து வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு சென்று, காலி பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
வீட்டில் உள்ள ‘பிரிஜ்’ மற்றும் ‘ஏசி’ இயந்திரத்தில் வெளியேறும் தண்ணீரை உடனே அப்புறப்படுத்தி, சுத்தப்படுத்த வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.