Arts, culture, entertainment and media
“விஜய் சேதுபதி ஒரு திமுக-காரர்” - மோகன் ஜி விமர்சனம்!

தமிழில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். வார இறுதியில் மட்டும் பேசும் இவர், கடந்த 12ஆம் தேதி வீட்டிற்குள் தலைவர் பதவி வகித்த ஷாகிதா குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல்.. தலைமை பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, எதிரணி மீது பழியை தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை” என்றிருந்தார்.
இது சமூக வலைதளத்தில் வைரலானது. அதாவது கரூரில் 41 பேர் இறந்தததைக் குறிப்பிட்டு அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யை மறைமுகமாக விஜய் சேதுபதி விமர்சித்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பலரும் கருத்து கூறி வந்தனர். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக மாற அரசியல் தளங்களிலும் சினிமா தளங்களிலும் பேசு பொருளாக மாறியது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் தொலைக்காட்சி நிறுவனம், விஜய் சேதுபதி பேசியது நிகழ்ச்சியை ஒட்டியே தவிர்த்து யாரோடும் ஒப்பிடுவதற்காக அல்ல என விளக்கம் அளித்தது. இருப்பினும் விஜய் சேதுபதி தவெக தொண்டர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்.
இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அதிமுக எம்.பி. இன்பதுரை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் இயக்குநர் மோகன் ஜி விஜய் சேதுபதிக்கு எதிராக கருத்து கூறியுள்ளார். அவர் கூறுகையில், “ஒரு தனியார் நிகழ்ச்சியில் இது போன்ற கருத்தை விஜய் சேதுபதி சொல்லியிருக்கக்கூடாது. நாங்கள் ஒரு கருத்து சொன்னால் சம்பந்தப்பட்ட நபர்களை நேரடியாக பெயர் சொல்லி சொல்லுவோம். அதனால் விஜய் சேதுபதி நேரடியாக முதல்வர் பெயரை குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம். ஒரு நிகழ்ச்சியை வைரலாக்குவதற்கு தமிழநாட்டு முதலமைச்சரை பயன்படுத்தக்கூடாது. இது மிகப்பெரிய தப்பு.
இதற்கு முன்பு போன ஆட்சியில் அரசு நடத்திய ஒரு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு அந்த ஆட்சியை புகழ்ந்து பேசினார். அதற்கும் முன்பு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்போது விஜய் ஆட்சியில் முதலமைச்சரை கீழ்தரமாக விமர்சித்திருக்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் அவர் ஒரு திமுக-காரர் என்பது மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)