‘மாஜி’ அரசு அதிகாரி வீட்டில் நகை திருட்டு
மப்பேடு: மப்பேடு அருகே ஓய்வு பெற்ற கல்வித்துறை கண்காணிப்பாளர் வீட்டில், நகை, பணம் திருட்டு போனது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியம் குமாரசேரி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம், 76. கல்வித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், கடந்த 2ம் தேதி தனது மனைவியுடன் போரூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று காலை குமாரசேரியில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 83 ஆயிரம் ரூபாய், ஒன்றே கால் சவரன் தங்க நகைகள் மற்றும் 2 வெள்ளி குத்து விளக்குகள் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து, சுந்தரம் கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.