Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
சென்னை, செப். 11-– தமிழக அரசின் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்துக்காக, பட்டினப்பாக்கத்தில் தேர்வு
தமிழக அரசின் புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டத்துக்காக, பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் வகைப்பாடு மாற்றம் குறித்து, பொதுமக்கள், 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், தமிழக அரசின் சட்டசபை, தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடி காரணமாக, சென்னையில் புதிய தலைமை செயலக வளாகம் கட்ட, அரசு முடிவு செய்தது.
இதற்காக, சென்னை பட்டினப்பாக்கத்தில் வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை, புதிய தலைமை செயலக திட்டத்துக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து நிலத்தை பெறுவது தொடர்பாகவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு போன்ற பணிகளுக்கு குழு அமைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பட்டினப்பாக்கத்தில் தேர்வு செய்யப்பட்ட நிலங்களின் வகைப்பாட்டை மாற்றம் செய்ய வேண்டும் என, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம், வீட்டுவசதி வாரியம் விண்ணப்பித்தது.
இதன் அடிப்படையில், நில வகைப்பாடு மாற்றம் செய்வதற்காக, பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ.. தொடங்கியுள்ளது.
இதுகுறித்து, சி.எம்.டி.ஏ., நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சென்னை பட்டினப்பாக்கத்தில், மூன்று குறிப்பிட்ட ‘சர்வே’ எண்களுக்கு உட்பட்ட, 21.37 ஏக்கர் நிலம் தற்போது, ஒரு பகுதி ஆதார குடியிருப்பு, ஒரு பகுதி நிறுவன பயன்பாடு, ஒரு பகுதி திறந்தவெளி மற்றும் பொழுதுபோக்கு வகைப்பாட்டில் உள்ளது.
இதை வணிக நோக்கத்தில், வணிக வளாகம் என்ற நில வகைப்பாட்டுக்கு மாற்ற, வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து, முழுமையான வரைபடங்கள், எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலக கலந்தாலோசனை மையத்தில், பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பகுதி மக்கள், அலுவலக நாட்களில் மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை, இந்த விபரங்களை நேரில் பார்வையிடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)