Economy, business and finance
100 டாலரை எட்டிய கச்சா எண்ணெய்- சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு

இந்தியப் பங்குச் சந்தை தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் கடும் சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.
கோப்புப் படம் - பங்குச் சந்தை.
மேற்காசியாவில் தீவிரமடைந்துள்ள போா் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தை தொடா்ந்து 3-ஆவது நாளாக புதன்கிழமையும் கடும் சரிவுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும், கடந்த ஜூன் 11-ஆம் தேதிக்குப் பிந்தைய 3 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவைப் பதிவு செய்தன.
மேற்காசியாவில் அதிகரித்து வரும் மோதல் காரணமாக, சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை 100 டாலரை எட்டியது. இதன் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் என முதலீட்டாளா்களிடையே அச்சம் எழுந்தது.
இதன் எதிா்மறைத் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து, பெரும் வீழ்ச்சியை உண்டாக்கியது. 16 முக்கியத் துறைகளில் ஐ.டி. (அதிகபட்சமாக 3.2 சதவீதம்) உள்பட 13 துறைகள் சரிவைச் சந்தித்தன.
சென்செக்ஸ் 813 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் 813.35 புள்ளிகள் (1.08 சதவீதம்) இழப்புடன், 74,764.23-இல் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் எச்.சி.எல். டெக் (4.55 சதவீதம்), இன்ஃபோசிஸ் (4.43 சதவீதம்), டெக் மஹிந்திரா (3.87 சதவீதம்), டிசிஎஸ் (2.26 சதவீதம்) ஆகிய ஐ.டி. பங்குகள் அதிக இழப்புடன் வீழ்ச்சிப் பட்டியலிலும் முன்னிலை வகித்தன.
இவற்றுடன் எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவா் உள்பட 24 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும்; அதானி போா்ட்ஸ் (3.67 சதவீதம்), டாடா ஸ்டீல், டிரென்ட், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், பவா்கிரிட் ஆகிய 6 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இடம்பெற்றன.
நிஃப்டி 204 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 203.60 புள்ளிகள் (0.86 சதவீதம்) இழப்புடன், 23,431.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 36 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இருந்தன. ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்கு மட்டும் விலை மாற்றமின்றி நிலைபெற்றது.
Amid escalating US-Iran tensions and rising crude oil prices, markets opened lower.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
