Economy, business and finance
மதுரையில் ஆன்லைனில் சுருட்டிய பணத்தை டாலராக மாற்றியதற்கு ரூ.10 லட்சம் கமிஷன் மாணவர் உட்பட மூவர் கைது 26 வங்கி பாஸ்புக், 18 அலைபேசிகள் 77 ஏ.டி.எம்., கார்டு, 60 சிம் கார்டுகள் பறிமுதல்

மதுரை: மதுரையில் ஆன்லைனில் மோசடி செய்த பணத்தை ஏ.டி.எம்., மில் எடுத்து அதை டாலராக மாற்றி அனுப்பி ரூ.10 லட்சம் வரை கமிஷன் பெற்று ஜாலியாக இருந்த கல்லுாரி மாணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் சமீபகாலமாக ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. 'லிங்க்' அனுப்பி, அதன்மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, ஓ.டி.பி., எண் அனுப்பி பணத்தை சுருட்டுவது என விதவிதமான சைபர் குற்றங்கள் நடந்து வருகிறது. மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சிலர் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக மாவட்ட எஸ்.பி., தேவநாதனுக்கு தகவல் கிடைத்தது.
ராமநாதபுரம் டூ மதுரை அவர் உத்தரவுடி, போலீசார் சோதனையிட்டு மூவரை கைது செய்து 26 வங்கி பாஸ்புக், 18 அலைபேசிகள், 77 ஏ.டி.எம்., கார்டுகள், 18 காசோலை புக், 60 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் பராஸ்கான் 23, முகமது முபாரக் 23, புதுக்கோட்டை ஹபீப் முகமது 21 எனத்தெரிந்தது. இதில் ஹபீப்முகமது கல்லுாரி மாணவர். பட்டதாரியான பராஸ்கான், தனது நண்பர்கள் மூலம் ஆன்லைனில் மோசடி செய்வது எப்படி என கற்றுக்கொண்டு ராமநாதபுரத்தில் முகமது முபாரக், ஹபீப்முகமது ஆகியோரை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு மோசடி செய்து வந்தார்.
போலீஸ் கண்காணிப்பு தீவிரமானதால் மதுரைக்கு இடமாறினர். நண்பர்கள், ஏழ்மை நிலைமையில் உள்ளவர்களிடம் 'குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதற்காக வங்கி பாஸ்புக், ஆதார் தேவைப்படுகிறது. கொடுத்தால் லாபம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்' எனக்கூறி 26 பேரிடம் பெற்றுள்ளனர். ஆதாரை வைத்து 60 சிம்கார்டுகள், 77 ஏ.டி.எம்., கார்டுகள், செக் புக் வாங்கி மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர்.
ரூ.ஒரு லட்சத்திற்கு ரூ.6300 கமிஷன் போலீசார் கூறியதாவது: ஒருவரிடம் மோசடி செய்து அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து தங்கள் வசமுள்ள 26 வங்கி கணக்குகளில் ஏதாவது ஒன்றுக்கு மாற்றுகின்றனர். அந்த பணத்தை உடனடியாக ஏ.டி.எம்., மில் எடுத்து மற்றொரு வங்கி கணக்கில் 'டிபாசிட்' செய்கின்றனர். அந்த தொகையை குறிப்பிட்ட செயலி மூலம் டாலராக மாற்றி சைபர் குற்றவாளிகளுக்கு அனுப்புகின்றனர்.
இதற்காக ரூ.ஒரு லட்சத்திற்கு கமிஷனாக ரூ.6300 பெற்று வந்துள்ளனர். அதை வைத்து ஜாலி வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். இப்படி ஓராண்டில் ரூ.10 லட்சம் கமிஷனாக பெற்றுள்ளனர். இதன் பின்னணியில் உள்ள சைபர் குற்றவாளிகள் குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.