Economy, business and finance
ஆன்லைனில் சுருட்டிய பணத்தை டாலராக மாற்ற ரூ.10 லட்சம் கமிஷன்; கல்லுாரி மாணவர் உட்பட மூவர் கைது

மதுரை: ஆன்லைனில் மோசடி செய்த பணத்தை, டாலராக மாற்ற, 10 லட்சம் ரூபாய் வரை கமிஷன் பெற்ற கல்லுாரி மாணவர் ஹபீப் முகமது, 23, உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, நாகமலை புதுக்கோட்டையில் சிலர் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவதாக, மாவட்ட எஸ்.பி., தேவநாதனுக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சோதனையிட்டு, மூவரை கைது செய்து, 26 வங்கி புத்தகம், 18 மொபைல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
சிக்கியவர்கள், ராமநாதபுரம் பராஸ்கான், 23, முகமது முபாரக் 23, புதுக்கோட்டை கல்லுாரி மாணவர் ஹபீப் முகமது என, தெரிந்தது.
பட்டதாரியான பராஸ்கான், ராமநாதபுரத்தில் முகமது முபாரக், ஹபீப் முகமது ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, ஆன்லைன் மோசடி செய்து வந்துள்ளார்.
அதன்பின், மதுரைக்கு இடம் மாறினர். ஏழ்மையில் உள்ளவர்களிடம், 'வங்கி புத்தகம், ஆதார் கொடுத்தால் பணம் கிடைக்கும்' எனக்கூறி, 26 பேரிடம் அவற்றை பெற்று, 60 சிம் கார்டுகள், 77 ஏ.டி.எம்., கார்டுகள், வங்கி காசோலைகள் வாங்கி, மோசடிக்கு பயன்படுத்தி உள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'மோசடியில் கிடைக்கும் பணத்தை, தங்கள் வசமுள்ள வங்கி கணக்குகளில் மாற்றி, பணத்தை ஏ.டி.எம்.,மில் எடுத்து, மற்றொரு கணக்கில் 'டிபாசிட்' செய்து, செயலி மூலம் அதை டாலராக மாற்றி, சைபர் குற்றவாளிகளுக்கு அனுப்பி உள்ளனர். இதற்காக, 1 லட்சம் ரூபாய்க்கு கமிஷனாக, 6,300 ரூபாய் பெற்றுள்ளனர். ஓராண்டில், 10 லட்சம் ரூபாய் வரை கமிஷனாக பெற்றுள்ளனர்' என்றனர்.