Arts, culture, entertainment and media
“வார்த்தைகளே வரவில்லை... ஆஸ்கருக்கு தகுதியான படம்” - புகழ்ந்து தள்ளிய சரத்குமார்

சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், சத்யராஜ், சுஹாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
மீனவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், அவர்களுக்குக்கிடையிலான படகுப்போட்டியை முக்கிய கதைக்களமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால் படத்திற்கு டிமாண்ட் அதிகரித்து வர திரையரங்குகளில் கூடுதல் காட்சி சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.65 கோடியை கடந்து அசத்தியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு சமமான படம் என சரத்குமார் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மண்டாடி படத்தைப் பார்த்த பிறகு வார்த்தைகளே வரவில்லை. இந்திய சினிமாவில் இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு துணிச்சலான படைப்பு. இது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம், ஆனால் அதுதான் உண்மை. முழுக்க முழுக்க கடலில் படமாக்கப்பட்டது, முற்றிலும் பிரமிக்க வைக்கும் ஒளிப்பதிவு, கடலில் உள்ள சவால்களைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தைரியம்.
கடலில் நடக்கும் ஒரு சாதாரண பாய்மரப் படகுப் பந்தயமாகத் தொடங்கி, மனித விழுமியங்கள், அன்பு, தியாகங்கள் எனப் பலவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. இது போல் சொல்லிக்கொண்டே போகலாம்.
முழு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக, கட்டாயம் பார்க்க வேண்டிய இந்தப் படத்தைக் காட்சிப்படுத்தி, இயக்கிய இயக்குநர் மதிமாறன் புகழேந்திக்கு வாழ்த்துகள். நடிகர் சூரி, கதாபாத்திரமாகவே வாழ்ந்து, தனது மிகச் சிறந்த நடிப்பைத் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். அனைத்து நடிகர்களும் அவருக்கு ஆதரவளித்துள்ளனர். ஜி.வி-யின் இசையும், ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான இந்தப் படத்தை உருவாக்கத் துணிச்சலுடன் முயற்சி செய்து நம்பிக்கையுடன் செயல்பட்ட தயாரிப்பாளர் எல்.ரெட்டும் இப்படத்தை மேலும் சிறப்பிக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)