Politics
விறுவிறு இடைத்தேர்தல்; அன்புமணியிடம் ஃபோனில் பேசிய எடப்பாடி பழனிசாமி?

தமிழகத்தில் ஏழு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் மாதம் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அன்று நடைபெறும் வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக, தோழமைக் கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறது. அதன்படி, பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய தலைவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இதற்கிடையில், இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இந்த நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸிடம் அதிமுக ஆதரவு கோரியுள்ளது. வெளியூர் சென்றுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசி மூலம் பேசி பா.ம.கவின் ஆதரவை கோரியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி சென்னை திரும்பியவுடன் அதிமுகவின் மூத்த தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் பா.ம.க கூட்டணி அமைத்து மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. இந்த சூழலில் மீண்டும் அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்க பா.ம.கவின் ஆதரவை அதிமுக கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)