Politics
மதுராந்தகம் தொகுதியில் வெளியூர் வேட்பாளர்: தி.மு.க.,வில் சலசலப்பு
- நமது நிருபர் -மதுராந்தகத்தில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தாமல், வெளியூர் வேட்பாளரை தி.மு.க., நிறுத்தியதால்,

மதுராந்தகத்தில் உள்ளூர் வேட்பாளரை நிறுத்தாமல், வெளியூர் வேட்பாளரை தி.மு.க., நிறுத்தியதால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது.
மதுராந்தகம் தொகுதி தி.மு.க., வேட்பாளராக, சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.-, பரந்தாமனை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த தொகுதியில் கடந்த தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றாலும், தற்போது ஆளும் கட்சியான த.வெ.க.,வின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும் என்பதால், தி.மு.க.,வின் வெளியூர் வேட்பாளர் அறிவிப்புக்கு, உள்ளூர் நிர்வாகிகளிடம் அதிருப்தி உருவாகியுள்ளது.
கடந்த, 10 ஆண்டுகளாக, தொகுதியில் கட்சி பணியாற்றும் ஒன்றிய செயலர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், வேட்பாளர் கனவில் இருந்தனர். அவர்களுக்கு, 'சீட்' கிடைக்காததால், தேர்தல் பணியை புறக்கணிக்க திட்டமிடுகின்றனர்.
இது குறித்து, உள்ளூர் தி.மு.க.,வினர் கூறியதாவது: மதுராந்தகம் தொகுதியில் தலித், வன்னியர், முதலியார் ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும். உள்ளூர் நிர்வாகிகளுக்கு தான் ஜாதி பின்னணி தெரியவரும். வெளியூர் வேட்பாளரால், அனைத்து ஜாதியினரையும் அரவணைக்க முடியாது.
தி.மு.க.,வில் நிலவும் அதிருப்தியை பயன்படுத்தி, அக்கட்சியின் சொந்த ஓட்டுகளை சிதற வைக்க, த.வெ.க., தரப்பில் திட்டமிடப்படுகிறது. வெளியூர் வேட்பாளரை நிறுத்தியதால், உள்ளூர் நிர்வாகிகள் பணம் செலவு செய்ய முன்வர மாட்டார்கள்.
இதனால், பூத் கமிட்டி பலவீனமடையும். தி.மு.க.,வில் உள்ளூர் நிர்வாகிகள் மூன்று பேர் சீட் கேட்டனர். அவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதால், உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் சிலர், த.வெ.க.,வுக்கு ஓட்டம் பிடிக்கவும் தயாராகியுள்ளனர்.
தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவர் தன் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில், நிர்வாகிகளை நியமித்து வைத்திருப்பதால், மற்ற சமுதாய நிர்வாகிகள் அதிருப்தியாக உள்ளனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியின் போதே, ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டவர் வெற்றி பெறும் வகையில், தொகுதியில் தி.மு.க., பலவீனமாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில், மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு, வரும் அக்.,6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகம் தொகுதியில், தி.மு.க., சார்பில் பரந்தாமன்; தாராபுரம் தொகுதியில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க., சார்பில், தேர்தல் பொறுப்பாளர்களாக, மதுராந்தகம் தொகுதிக்கு, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலர் அன்பரசன், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலர் சுந்தர் ஆகியோரும், தாராபுரம் தொகுதிக்கு தி.மு.க., துணை பொதுச்செயலர் சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலர் பத்மநாபன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.