Politics
தாலுகா அலுவலகம் முற்றுகை முயற்சி
திண்டுக்கல், செப்.10 நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தை
நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தை ஆலக்குவார்பட்டி கிராம மக்கள் முற்றுகையிட முயன்றனர்.
திண்டுக்கல் அடுத்த ஆலக்குவார்பட்டி பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஆக.,27ல் மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மூன்று ஆண்டுகளுக்கு முன் 350 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பின்னர் அந்த நிலத்தை வேறு நபர்களுக்கு ஒதுக்கிவிட்டதால் பட்டா இருந்தும் நிலமற்றவர்களாக உள்ளோம். நிலத்தை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என தாசில்தார் கிருஷ்ணமூர்த்தியிடம் முறையிட்டனர்.
நேற்று முன்தினம் தாலுகா அலுவலக அதிகாரிகள் கூறியபடி நில அளவையர், உதவி தாசில்தார் உள்ளிட்டோர் ஆலக்குவார்பட்டிக்கு வந்தனர். ஆனால் முறையாக நிலம் அளவீடு பணி மேற்கொள்ளவில்லை.
இதையடுத்து அப்பகுதி மக்கள் நேற்று மீண்டும் மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். போலீசார் தடுத்தனர். தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஆலக்குவார்பட்டியில் நிலம் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்வதாக தாசில்தார் தெரிவித்தார். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.