Arts, culture, entertainment and media
தலைமை பண்பு விவகாரம்; விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் குரல்!

தமிழில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். வார இறுதியில் மட்டும் பேசும் இவர், கடந்த 12ஆம் தேதி பேசிய இவர் வீட்டிற்குள் தலைவர் பதவி வகித்த ஷாகிதா குறித்து பேசியிருந்தார். அவர் பேசியதாவது, “தலைவர் என்றால் என்னவென்று தெரியாமல்.. தலைமை பண்பு என்றால் என்னவென்று தெரியாமல், வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துவிட்டு, எதிரணி மீது பழியை தூக்கிப் போட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது தலைவருக்கான தகுதி இல்லை. அது ஏமாற்று வேலை” என்றிருந்தார்.
இது சமூக வலைதளத்தில் வைரலானது. அதாவது கரூரில் 41 பேர் இறந்தததைக் குறிப்பிட்டு அக்கட்சியின் தலைவர் முதல்வர் விஜய்யை மறைமுகமாக விஜய் சேதுபதி விமர்சித்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பலரும் கருத்து கூறி வந்தனர். இதனிடையே அதிமுக எம்.பி, “நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்க, அவருக்குச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் மேலும் பெரிதாக மாற பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் தொலக்காட்சி விளக்கம் அளித்தது. அதாவது நிகழ்ச்சியை ஒட்டியே விஜய் சேதுபதி கருத்து தெரிவித்ததாகவும் அதனை நிகழ்ச்சிக்கு வெளியே யாரோடும் ஒப்பிடக்கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
இருப்பினும் விஜய் சேதுபதி தவெக தொண்டர்களால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார். இந்த செயலை தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பேசியதாகத் தாங்களாகவே பொருள் கற்பித்துக்கொண்டு, தவெகவினர் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தும் இழிவுபடுத்தியும் வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தம்பி விஜய்சேதுபதி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. எந்த அரசியல் கட்சியையும் கட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டில் உருவான சூழலை வைத்து தலைமைத்துவம் குறித்த தனது கருத்தைச் சொல்கிறார். அதனை உடனடியாகத் தங்களது தலைவரோடு பொருத்திப் பார்த்து, கருத்து சொன்னவரையே தாக்க முற்படுவது ஏன்? மற்ற எந்த கட்சிக்கும் வராத கோபம் அமைச்சர் தொடங்கி தொண்டர் வரை தவெகவினருக்கு மட்டும் வருவது ஏன்? தலைமைத்துவம் குறித்த பொதுவான ஒரு கருத்தே தங்களை இவ்வளவு கோபப்படுத்துகிறதென்றால், ஜனநாயகத்தில் எழும் நேரடி விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இதுதான் நீங்கள் பேசிவரும் மாற்று அரசியலா? இதுதான் உங்கள் அரசியல் பண்பாடா? இதுதான் உங்கள் ஜனநாயக மாண்பா? இவ்வளவு தான் உங்கள் சகிப்புத்தன்மையா?
ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்ல, கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உண்டு. அந்தக் கருத்து நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம். அதனை மறுத்துப் பேசலாம், எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கூட்டமாகச் சென்று தனிநபரை வசைபாடுவதும், மிரட்டுவதும், அவதூறு செய்வதும் ஜனநாயக அரசியல் பண்பல்ல. அரசியலுக்கு வந்த பிறகு பாராட்டுகளை மட்டும் எதிர்பார்க்க முடியாது. விமர்சனங்களையும் கேள்விகளையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். அதிகாரம் என்பது விமர்சனத்திலிருந்து பாதுகாக்கும் கவசம் அல்ல. விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு.
எனவே, தம்பி விஜய் சேதுபதியின் பொதுவான கருத்தை, தங்கள் மீதான விமர்சனம் என தவறாகப் பொருள்கொண்டு அவரை இழிவுபடுத்துவதையும், வசைபாடுவதையும், தனிப்பட்ட தாக்குதலுக்கு உள்ளாக்குவதையும் தொடர்புடையவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். தனக்குப் பிடித்த கருத்தை மட்டுமே மற்றவர்கள் பேசவேண்டும் என நினைப்பது ஜனநாயகம் அல்ல. தனக்கு எதிரான கருத்தையும் பேச அனுமதித்து, அதற்கு கருத்தால் பதில் சொல்வதுதான் ஜனநாயகம்! ஜனநாயகன் என்று படம் எடுத்தால் மட்டும் போதாது... உண்மையான ஜனநாயகத்தைப் போற்றி அதன் மாண்புகளைக் காக்க வேண்டும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்! கேள்விக்குப் பதிலால் எதிர்வினையாற்றுங்கள்!
வசையாலும் மிரட்டலாலும் கருத்துரிமையை முடக்க முற்படாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
#BiggBoss10 தொலைக்காட்சி நிகழ்ச்சியில், அந்நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடையே நடைபெற்ற விளையாட்டுச் சூழலை முன்வைத்து தலைமைத்துவம், பொறுப்புணர்வு, அதிகாரம் ஆகியவை குறித்து அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி விஜய் சேதுபதி அவர்கள் தெரிவித்த பொதுவான கருத்துகளை, முதலமைச்சர்… pic.twitter.com/35RzihSat7
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) September 15, 2026
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)