Politics
பள்ளி மேலாண்மை குழு புதிய நிர்வாகிகள் தேர்வு

வால்பாறை: அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறு கட்டமைப்பு செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன் படி வால்பாறை அடுத்துள்ள சோலையாறு முதல் பிரிவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் அருண் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் புதிய தலைவராக பெரியநாயகி, துணைத்தலைவராக லாவண்யா மற்றும் உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து பள்ளி வளர்ச்சி குறித்தும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
வால்பாறை அடுத்துள்ள அப்பர்பாரளை எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருச்செல்வி தலைமை வகித்தார்.பார்வையாளராக எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் கலந்து கொண்டார். கட்டமைப்பின் புதிய தலைவராக முத்துமாரி, துணைத்தலைவராக பாண்டியம்மாள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் பள்ளியின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.