Politics
நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு

அச்சிறுபாக்கம்:செங்கல்பட்டில் இருந்து ரயில்கள் மூலம் தென்மாவட்டங்களில் உள்ள அரவை மில்களுக்கு நெல் மூட்டைகள், அனுப்பிவைக்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் குருவை பருவத்திற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.
மாவட்டத்தில் 1.60 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் உள்ள நிலையில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இவற்றில், குருவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட 50 ஆயிரம் டன் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம், கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நெல் மூட்டைகள், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துாரில் உள்ள திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ளதால், தென் மாவட்டங்களில் உள்ள அரவை 'மில்'களுக்கு,
நெல் மூட்டைகள் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது.
சேமிப்பு கிடங்கில் இருந்து லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றி , செங்கல்பட்டில் இருந்து ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.