Crime, law and justice
கர்ப்பிணி சாவு குறித்து விசாரணை நடத்த பழங்குடியின ஆணையத்திற்கு மனு
புதுச்சேரி: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடியின இருளர் சமுதாய கர்ப்பிணி சாவு குறித்து நடவடிக்கை எடுக்க கோரி டில்லி தேசிய பழங்குடியினர் உரிமை பாதுகாப்பு ஆணைய சேர்மன் அந்தர் சிங் ஆர்யாவிற்கு புதுச்சேரி பா.ஜ., மாநில சிறப்பு அழைப்பாளர் வீரராகவன் மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், ‘காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 40. இவரது மனைவி தேன்மொழி, 35. இவர்கள் அங்குள்ள மரக்கிடங்கு ஒன்றில் மரம் வெட்டும் தொழில் செய்து வந்தனர்.
ஒன்பது மாத கர்ப்பிணியான தேன்மொழிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு வெளியே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மரப்பட்டரையின் உரிமையாளரிடம் கேட்டனர்.
அதற்கு அவர்கள், ஏற்கனவே வாங்கிய முன்பணம் கடனை காட்டி, தேன் மொழியையும் அவரது கணவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காததால், தேன்மொழிக்கு வேலை செய்யும் இடத்திலேயே குழந்தை பிறந்தது.
அதிக ரத்தப்போக்கு காரணமாக தேன்மொழியும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இச்சமுதாயத்தின் விளிம்பு நிலையில் மிகவும் வறுமையில் பிடியின் சிக்கித் தவிக்கும் பழங்குடியின இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை இவ்வாறு கொத்தடிமைகளாய் பயன்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.