Politics
இடைத்தேர்தல் அக்னிப் பரீட்சை... நெருக்கடியில் கழகங்கள்!

மதுராந்தகம் தொகுதியில் பட்டியல் சமூக வாக்குகள் 45 சதவிகிதம் அளவுக்கு இருக்கின்றன. த.வெ.க-வும் வி.சி.க-வும் அணி சேர்ந்திருப்பதால், அந்தச் சமூக வாக்குகள் திரளாகக் கிடைப்பதோடு, முதல்வரின் பாப்புலாரிட்டிக்கு இதர சமூக வாக்குகளும் திரண்டுவிடும்.
அரியணையில் அமர்ந்தவுடன் முதல் ஆசிட் டெஸ்ட்டைச் சந்திக்கவிருக்கிறது த.வெ.க அரசு. மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், அதில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் முதல்வர் விஜய். எந்த அளவுக்கு முதல்வர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறாரோ, அதே அளவுக்கு தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன.
முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் களம் புகுந்திருக்கும் தி.மு.க., இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற்று தனக்குள்ள செல்வாக்கை மீட்டெடுக்கப் பார்க்கிறது. மறுபுறம், தன்னிடமிருந்து பறிக்கப்பட்ட இரண்டு தொகுதிகளையும் வென்றெடுத்து, கட்சிக்குள் தன்னுடைய செல்வாக்கை நிரூபித்துவிட முயல்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இவர்களுக்கிடையே, ‘த.வெ.க-வை வெற்றியடையாமல் செய்துவிட்டால் போதும்’ என்ற மனநிலையில், நாம் தமிழர் கட்சி சீமானும் கோதாவில் குதித்திருக்கிறார். நான்குமுனைப் போட்டி சூடாகியிருக்கும் இடைத்தேர்தல் களத்தில், கழகங்களின் வியூகங்கள் குறித்து விசாரித்தோம்.
ஏன் வந்தது இடைத்தேர்தல்?
த.வெ.க ஆட்சிமீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், வேலுமணி, சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த 25 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் புகாரளித்த நிலையில், ஆதரவு தெரிவித்த தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமரவேல், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகிய நான்கு எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். தொடர்ச்சியாக, விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளைத் துறந்தனர்.
சபாநாயகரிடம் அளித்த புகார் மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்பப் பெற்றுக்கொண்டு விட்ட நிலையில், நீதிமன்றத்திலுள்ள நிலுவை வழக்குகளால் ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடை நீடிக்கிறது. வழக்கில் சிக்காத தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். வரும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், த.வெ.க-வில் இணைவதற்கு எம்.எல்.ஏ பதவிகளைத் துறந்தவர்களுக்கே மீண்டும் வாய்ப்பளித்திருக்கிறார் முதல்வர் விஜய். கடந்த 8-ம் தேதி, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான கூட்டத்தை முடித்துக்கொண்டு, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்டவர்களுடன் இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசித்திருக்கிறார். இரு தொகுதிகளுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமிக்கத் தீர்மானித்திருப்பவர், இந்த மாத இறுதியில் இரண்டு தொகுதிகளிலும் தலா ஒரு நாள் பிரசாரம் மேற்கொள்ளவும் முடிவெடுத்திருக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களிடம் நேரில் ஆதரவும் கோரியிருக்கிறார் முதல்வர்.
நம்பிக்கையில் மதுராந்தகம்... தடுமாற்றத்தில் தாராபுரம்!
நம்மிடம் பேசிய த.வெ.க-வின் சீனியர்கள் சிலர், “மதுராந்தகம் தொகுதியில் பட்டியல் சமூக வாக்குகள் 45 சதவிகிதம் அளவுக்கு இருக்கின்றன. த.வெ.க-வும் வி.சி.க-வும் அணி சேர்ந்திருப்பதால், அந்தச் சமூக வாக்குகள் திரளாகக் கிடைப்பதோடு, முதல்வரின் பாப்புலாரிட்டிக்கு இதர சமூக வாக்குகளும் திரண்டுவிடும். அந்தத் தொகுதியில் வெற்றி உறுதியென்பதால் கவலையில்லை. ஆனால், தாராபுரம் பற்றித்தான் கலக்கத்தில் இருக்கிறோம்.
தாராபுரத்தில், அ.தி.மு.க சார்பில் வெற்றிபெற்றிருந்த சத்தியபாமா 81,100 வாக்குகளை வாங்கியிருந்தார். மூன்றாமிடம் பெற்ற த.வெ.க-வுக்கு 46,438 வாக்குகளே கிடைத்தன. அதாவது, 34,662 வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க-வைப் பின்னுக்குத் தள்ளியது அ.தி.மு.க. கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர் கணிசமாக இருக்கும் அந்தத் தொகுதி, திருப்பூர் மாவட்டத்துக்குள் வருகிறது. மாவட்டப் பொறுப்பு அமைச்சரான அருண் ராஜ், நாட்டுக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர். இன்னும் சமூக அரசியல் அவருக்கு வசப்படவில்லை.
தாராபுரம் தொகுதியில், சுமார் 23 சதவிகிதம் பட்டியல் சமூகத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் ஆதரவு, கடந்த தேர்தலில் மிகுதியாக த.வெ.க-வுக்குக் கிடைத்தது. அரசின் மீது ஏற்கெனவே பட்டியலினப் பார்வை இருப்பதால், இதர சமூக வாக்குகளெல்லாம் மீண்டும் அ.தி.மு.க., தி.மு.க-வுக்குத் திரண்டுவிடும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சூழலில், ‘சத்தியபாமா மீது லோக்கலில் அதிருப்தி நிலவுவதால், அவரை வேட்பாளராக்க வேண்டாம்’ என உள்ளூர் த.வெ.க பிரமுகர்கள் சொன்னதை, தலைமை கேட்கவில்லை. இது போன்ற பிரச்னைகளால், தாராபுரத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது” என்றனர்.
காத்திருக்கும் பருந்துகள்... தப்பிப்பாரா எடப்பாடி?
த.வெ.க-வைப்போலவே, வெற்றிபெற்றே ஆகவேண்டிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த இடைத்தேர்தல், அவரது ஆளுமைக்கு விடப்பட்டிருக்கும் பெரிய சவால்தான். சிட்டிங் தொகுதிகளில் மீண்டும் வெற்றிபெற முடியவில்லை என்றால், அவரது தலைமை, கட்சிக்குள் மீண்டும் கேள்விக்குறியாகிவிடும். காத்திருக்கும் பருந்துகள் அவரைக் கொத்திக் குதறிப்போட தயாராகிவிடும்.
நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலர், “இடைத்தேர்தல் நடைபெறப் போகும் இரு தொகுதிகளிலும், வன்னியர், கவுண்டர் சமூகத்தினர் கணிசமாக இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு அ.தி.மு.க-வுக்கு அமோகமாக இருக்கிறது. த.வெ.க கூட்டணியில் இணைந்திருக்கும் நான்கு கட்சிகளுக்குமே, தாராபுரத்தில் பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. பொதுத்தேர்தலில் கிட்டத்தட்ட 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெற்றது. அது, சாதாரண எண்ணிக்கை கிடையாது. அந்தத் தொகுதியில் சத்தியபாமாவுக்கு தனிச்செல்வாக்கு கிடையாது. அ.தி.மு.க செல்வாக்கில்தான் அவர் வெற்றிபெற்றார். ஆகவே, தாராபுரம் இடைத்தேர்தல் குறித்து தெம்பாகவே இருக்கிறார் எடப்பாடி. அதேசமயம், மதுராந்தகத்தில் அவருக்கு நம்பிக்கை குறைவாகவே இருக்கிறது.
த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலின் தனிப்பட்ட செல்வாக்கும், த.வெ.க - வி.சி.க கூட்டணியும், மதுராந்தகத்தில் த.வெ.க-வுக்குப் பெரிய பலம்தான். இந்த நிலையில்தான், அ.தி.மு.க சார்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தையும், தாராபுரத்தில் பானுமதியையும் வேட்பாளர்களாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. ஏற்கெனவே இரு தொகுதிகளுக்குப் பெண் வேட்பாளர்களை அறிவித்ததுபோலவே, இந்த முறையும் பெண்களுக்கே வாய்ப்பளித்திருக்கிறார்” என்றனர்.
பா.ஜ.க., புதிய நீதிக்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு ஆதரவு கோரியிருக்கிறது அ.தி.மு.க டீம். இரட்டை இலைக்கு ஆதரவு தெரிவிப்பதாக அ.ம.மு.க தலைவர் டி.டி.வி. தினகரனும் அறிவித்திருக்கிறார். பா.ம.க தலைவர் அன்புமணி வெளியூர் பயணத்தில் இருப்பதால், அவர் ஊர் திரும்பியவுடன் அவரிடம் நேரில் ஆதரவு கோரவிருக்கிறார்கள் அ.தி.மு.க தலைவர்கள்.
சபதமேற்ற உதயநிதி... களமிறங்கும் இளைஞரணி!
த.வெ.க., அ.தி.மு.க-போலவே தி.மு.க-வும் சூடாக இடைத்தேர்தல் களத்துக்குள் புகுந்திருக்கிறது. “அப்பாவைக் காணோம் எனச் சொன்ன முதல்வர் விஜய்... தி.மு.க-வைக் காணோம் எனப் பிரசாரத்தில் கிண்டலடித்துவிடுவார்...” என சீனியர்கள் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இரண்டு தொகுதிகளிலும் முதல் கட்சியாக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது தி.மு.க.
நம்மிடம் பேசிய தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்கள் சிலர், “இந்த இடைத்தேர்தல் ரிசல்ட் மூலமாக, முதல்வர் விஜய்யின் பிம்பத்தை உடைக்கச் சபதம் ஏற்றிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மதுராந்தகத்துக்கு பனையூர் பாபு, தாராபுரத்துக்கு கயல்விழி செல்வராஜை வேட்பாளராக்கலாம் என்பதே சீனியர்களின் முடிவு. அதை ஏற்காத உதயநிதி, ‘இடைத்தேர்தலில் இளைஞர்களுக்கும், இளைஞரணிக்கும் வாய்ப்பு தாருங்கள். வெற்றிபெறவைப்பது என் பொறுப்பு’ எனத் தன் ஆதரவாளர்களான பரந்தாமனுக்கும் சுகன்யாவுக்கும் சீட்டைக் கேட்டுப் பெற்றிருக்கிறார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட தி.மு.க செயலாளர்கள் மதுராந்தகத்தில் முகாமிடத் திட்டமிடுகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா.மோ.அன்பரசன், கே.என்.நேருவுக்கு மதுராந்தகத்தை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தரப்படலாம். அதேபோல, தாராபுரத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் வெள்ளக்கோயில் சாமிநாதன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, சக்கரபாணி ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
50 வாக்குகளுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து, தொகுதி முழுக்க டோர் டு டோர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது இளைஞரணி. தி.மு.க ஆட்சியில் நிறைவேறிய நலத்திட்டங்கள், த.வெ.க நிறைவேற்றாத வாக்குறுதிகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லவிருக்கிறோம். தலைவர் ஸ்டாலினை முதல்வர் விஜய் அவதூறாகப் பேசியதையும் மக்களிடம் கொண்டு செல்லவிருக்கிறோம். தாராபுரத்தைவிட மதுராந்தகத்தில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டிருக்கிறது தலைமை. ‘குறைந்த வாக்குகளில்கூட வெற்றிபெற முடியும்’ என சர்வே டீம் கோடிட்டுக் காட்டியிருப்பதால், தொகுதியிலுள்ள 75% வாக்காளர்களைப் பிரசாரத்தில் அணுகுவதே எங்களுடைய இலக்கு” என்றனர்.
இடைத்தேர்தல் அக்னிப் பரீட்சை... நெருக்கடியில் கழகங்கள்!
மூன்று கழகங்களுக்கு இடையே, “நானும் இருக்கிறேன் பார்!” எனச் சண்டையில் குதித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவருக்கு நெருக்கமான நா.த.க நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “இந்த இடைத்தேர்தலில், ‘த.வெ.க எனும் சமூகக் குப்பையை அகற்றிவிட வேண்டும்’ என்று நினைக்கிறார் சீமான். எனவே, இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தவிருக்கிறோம். ‘த.வெ.க-வுக்கு மக்கள் ஏன் வாக்களிக்கக் கூடாது?’ என்பதை மையப்படுத்திப் பிரசாரம் செய்வோம். எங்களால் வெல்ல முடியாதுதான். ஆனால், த.வெ.க-வுக்கு விழுகிற 5,000 வாக்குகளை எங்களால் தடுக்க முடியும். அதுவே ஒரு சமூக சேவைதான்” என்றனர்.
இந்த இடைத்தேர்தல், உண்மையிலேயே கழகங்களுக்குப் பெரிய நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றன. “இந்த இடைத்தேர்தலில் த.வெ.க வென்றால் மட்டுமே, எம்.எல்.ஏ-க்களின் பலம் 109-ஆக உயரும். இந்த எண்ணிக்கையைப் பெற்றுவிட்டால் காங்கிரஸ், வி.சி.க., ஐ.யூ.எம்.எல் ஆதரவுடனேயே ஆட்சியை நகர்த்திவிடலாம். கம்யூனிஸ்ட்டுகளைத் தூக்கிச் சுமக்கத் தேவையில்லை. ஆகவே, எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றே ஆக வேண்டுமெனக் கண்டிப்புடன் கூறியிருக்கிறார் முதல்வர் விஜய்” என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.
இரண்டில் ஒன்றையாவது வென்று, தன் ஆளுமையை நிலைநாட்ட பகீரதப் பிரயத்தனம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. இரண்டுமே கையைவிட்டுப் போய்விட்டால், கட்சியும் தன் கையைவிட்டுப் போய்விடுமெனப் பதறிப் போயிருக்கிறார். ஏற்கெனவே சீனியர்-ஜூனியர் ஈகோ யுத்தம் தலைவிரித்தாடும் தி.மு.க-வில், இடைத்தேர்தல் வெற்றி மூலமாகத் தன் தலைமையை நிரூபிக்கப் பார்க்கிறார் உதயநிதி. இதில், தி.மு.க தோற்றால் உதயநிதியின் செல்வாக்கு கட்சிக்குள்ளும் பொதுவெளியிலும் சரிந்துவிடும்.
த.வெ.க-வைத் தவிர்த்து, மற்ற இரண்டு கழகங்களுமே பசையை தாராளமாக இறக்குவதற்கு முடிவெடுத்திருக்கின்றன. ‘ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 60 ஸ்வீட் பாக்ஸ்கள்’ என இப்போதே தயாராகிறது அண்ணா சாலைக் கட்சி. அவ்வை சண்முகம் சாலையிலும் பெட்டிகள் தயாராகின்றன. கட்சிக் கட்டமைப்பு, பசை விநியோகம், சோஷியல் மீடியா டிரெண்ட் என யுத்தத்துக்குத் தயாராகின்றன இரு பெரும் கழகங்களும். ஆனால், “பிரசாரத்தில் இரண்டு மூன்று சைகைகளைக் காட்டிவிட்டாலே போதும். வெற்றி நிச்சயம்’’ என்று அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் முதல்வர் விஜய். நாளுக்கு நாள் இடைத்தேர்தல் களம் சூடாகிறது. யாருடைய கணக்கு வெல்லப்போகிறதோ?!
