Politics
“நம்பிய மக்களை ஏமாற்றிய எம்.எல்.ஏ.க்கள்… மீண்டும் அதிமுக வெல்லும்” – கே.பி. முனுசாமி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, இடைத்தேர்தலில் பாஜக ஆதரவை கோரினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, “நம்பி வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றிவிட்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சென்றுவிட்டனர். மீண்டும் மக்களின் நம்பிக்கை பெற்ற வேட்பாளரை நிறுத்தி அதிமுக வெற்றி பெறும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு உட்பட மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இந்தியத் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. தொடர்ந்து தவெக ஆட்சி அமைந்தபிறகு, இந்தத் தொகுதிகளின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமாரவேல், சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு தொகுதிகள் உட்பட தமிழ்நாட்டில் ஏழு தொகுதிகள் காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தற்போது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர்த்து மற்ற ஐந்து தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இரண்டு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என அறிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவர்களுக்கான, விருப்ப மனுக்கள் விநியோகத்தையும் அதிமுக தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தலில் பாஜகவின் ஆதரவை கோரி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் நாயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, “நடைபெற இருக்கும் இரண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில், ஏற்கனவே 2026ல் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகள். இந்நிலையில், ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த பாஜக இடைத்தேர்தலிலும் ஆதரவு தர வேண்டும் என பொதுச் செயலாளர் கொடுத்த கடிதத்தை இன்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்து கொடுத்தோம். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இந்த ஆதரவு கடிதம் குறித்து உரியவர்களிடம் பேசி முடிவை அறிவிப்பார். இன்னும் ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்திக்க இருக்கிறோம்.
வாக்காளர்கள் ஏற்கனவே நம்பிக்கையோடு வாக்களித்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற செய்தனர். அந்த நம்பிக்கையை ஏமாற்றிவிட்டு, எம்.எல்.ஏ.க்கள் சென்றுவிட்டனர். மீண்டும் மக்களின் நம்பிக்கையோடு அதிமுக வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டு, வெற்றி பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.
