Lifestyle and human interest
பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடா?

மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உலகளாவிய ஃபின்டெக் உச்சிமாநாடு ஜியோ வேர்ல்ட் பிளாசா வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு நடைபெறுவதற்கு முன்னதாக இந்த வளாகத்திற்குள் போலி அடையாள அட்டையுடன் நுழைந்த நபர் மற்றும் துப்பாக்கியுடன் இருந்த அவரது மெய்க்காப்பாளர் ஆகியோரை மும்பை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள நிதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, 24 வயதான ரோஹன் பரேக் என்ற இளைஞர் தன்னை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலக அதிகாரி என அடையாளப்படுத்திக் கொண்டு உள்ளே செல்ல முயன்றார். அவர் காட்டிய அடையாள அட்டையை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தபோது, அது போலியானது என்பது கண்டறியப்பட்டது.
அவருடன் வந்த திலீப் ராஜா குந்தே (49) என்ற நபர், ரோஹனின் மெய்க்காப்பாளர் எனத் தெரிவித்துள்ளார். அவரிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வணிக வளாக பாதுகாப்பு ஊழியர்களை மீறி, இவர்கள் இருவரும் போலி ஆவணங்களுடன் அத்துமீறி நுழைய முயன்றதால் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். பிரதமர் வருகையையொட்டி இச்சம்பவம் நிகழ்ந்ததால் பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக, விசாரணை உடனடியாக மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரின் மொபைல் போன்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், அவர்கள் எதற்காக போலி அடையாள அட்டையுடன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அங்கு வந்தார்கள் என்ற பின்னணி குறித்தும், இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)