Arts, culture, entertainment and media
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இடதுசாரி வேட்பாளர்களை ஆதரித்திருப்பேன்... சீமான் பேட்டி

"தலைவன் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற பொதுவான கருத்தையே நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார். அதை தங்களோடு ஒப்பிட்டுக்கொண்டு தவெக-வினர் கோபப்படுவது ஏன்? விஜய் சேதுபதியின் கருத்துகள் கடந்த ஆட்சியாளர்களுக்குக் கூட பொருந்தலாம் " என சீமான் தெரிவித்தார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம் என முன்பே கூறியிருந்தால் இடதுசாரிகளை நாம் தமிழர் கட்சி ஆதரித்திருக்கும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருக்கக்கூடிய இடத்தை தலைமை செயலகமாகத்தான் அன்று கட்டினார். கருணாநிதியின் ஆட்சி முடிந்து ஜெயலலிதா ஆட்சி வந்த போது தலைமைச் செயலகமாக மாற்றாமல் நீங்கள் கட்டினால், அதை நான் பயன்படுத்த வேண்டுமா என்று அதை அரசு மருத்துவமனையாக மாற்றினார். இன்று புதிய நவீன வசதி வேண்டும் என்று கூறிவரும் அரசியல் கட்சி தலைவர்கள் அன்று மாற்றக்கூடாது கட்டிய நோக்கம் புதிய தலைமை செயலகமாக மாற்ற வேண்டும் என்று சொல்லாமல் அப்போது மௌனமாக இருந்த காரணம் என்ன?" எனக் கேள்வி எழுப்பினார்.
"சென்னையே போக்குவரத்து நெரிசல் உள்ள மாநகரம். மக்களின் வாழ்விடங்களை அப்புறப்படுத்தி அங்கு கட்ட வேண்டிய தேவை என்ன இருக்கு? இது மத்திய அரசின் கட்டிடம் என்று கூறுகிறீர்கள். மத்திய அரசுக்கு என்ன கட்டிடம்? அது வெள்ளைக்காரர்கள் கட்டிய கட்டிடம். யாரைக் கேட்டு கச்சத்தீவை எடுத்துக் கொடுத்தீர்கள்? மத்திய அரசு கேட்டால் அதை எதிர்த்து ஒரு அரசாணை வெளியிட முடியாதா? இடைப்பட்ட இடத்தில் தான் தலைமை செயலகம் இயங்கும் என்று. மக்களின் காசு வீணடிக்க மாட்டேன் என்று கூறி இதெல்லாம் என்ன?
கருணாநிதி 600 கோடியில் கட்டிடம் கட்டினார். தற்பொழுது 1200 கோடி என்பதுதான் மாற்றா? ஆயிரம் ரூபாய்க்கு திமுக கொடுத்தால் நாங்கள் 2500 ரூபாய் கொடுக்கிறோம் என்பது மாற்றா? எடப்பாடி பழனிச்சாமி மூன்று சிலிண்டர் கொடுத்ததாக கூறினார். ஆனால் நீங்கள் ஆறு சிலிண்டர் கொடுப்பதாக கூறினீர்கள். இதெல்லாம் மாற்றா? எது மாற்று?" என்றும் கேள்வி எழுப்பினார்.
"தேவையில்லாமல் அச்சத்தை வைத்து போராடிக் கொண்டு இருக்காதீர்கள் என்று மக்களிடம் நான் கூறுகிறேன். ஒன்றும் நடக்கப் போவதில்லை. கட்ட விடப்போவதும் இல்லை. நீங்கள் சென்று உங்கள் வேலையை பார்த்துக் கொண்டு இருங்கள். மக்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி சொந்த இடத்திலேயே அகதிகளாக இருப்பது இனி நடக்கப் போவதில்லை. மேகமலை பிரச்சனை குறித்து சட்டசபையில் பேசியது என்ன? மாஞ்சோலை பிரச்சினை இன்று விவாதிக்கப்படுகிறதா? உங்களுக்கு சர்க்கார் பட பதாகைகளை சுவரொட்டி கிழித்ததுதான் பிரச்சனை" என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
"மேகமலையில் பத்தாயிரம் குடும்பங்கள் இன்று போராடிக் கொண்டு இருக்கிறது. அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் எங்களை வாழ்விடத்தை விட்டு வெளியேற்றாதீர்கள் என்று போராட்டம் நடத்தி வருகிறார். அதைப்பற்றி கவனம் இல்லை" என்று விமர்சித்தார்.
ஓமந்தூராரில் தலைமை செயலகம் கட்டப்பட்டது. வேண்டும் என்றால் அதனை சீரமைத்து பயன்படுத்தி கொள்ளலாம். மருத்துவமனையை வேற இடத்துக்கு மாற்றி கொள்ளலாம். 13 லட்சம் கோடி கடன் இருப்பதாக நிதிநிலை வெள்ளை அறிக்கையில் தெரிவித்தீர்கள். கடனுக்கு வாங்கி வட்டி கட்டிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த நிலைமையில் எதுக்கு புதிய சட்டமன்ற கட்டிடம்? யார் கேட்டது உங்களிடத்தில்? ஏற்கனவே இருக்கக்கூடிய தலைமை செயலகத்தில் இருந்துதான் ஆகப்பெருக்கு மேதைகள் ஆட்சியை நடத்தி சென்று இருக்கிறார்கள். பல திட்டங்கள் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிலிருந்து வேலை செய்யுங்கள். அப்படி அவசியப்பட்டால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை மாற்றுங்கள்” என்று தெரிவித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான்,"அரசியல் தெரிந்தவர்களிடம் பேசலாம், அவதூறு பரப்புபவர்களிடம் பேச முடியாது. விஜய் சேதுபதி கூறிய கருத்து கடந்த கால ஆட்சியாளர்களை சாராதா? அவர்களை ஆட்சியைப் பற்றி சாராதா? ஒரு பொது கருத்து. அதை என்னோடு, உங்களோடு பொருத்திக்கொண்டு பிரச்சனை செய்வது அவசியமற்றது.
தன்னை தான் சொல்கிறார்கள் என்று நினைத்தால் எப்படி? அல்லது அவர் சொன்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் ஓடுகிறீர்களா என்றால், அதை ஒன்றும் செய்ய முடியாது." என்று பதிலளித்தார்.
முதல்வரின் லண்டன் பயணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சீமான், ""வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருவது என்ற திட்டத்திற்கு நான் எதிரானவன். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருவது எனக்கு உடன்பாடு இல்லை. ஜெயலலிதா இருந்தபோது முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. பல லட்சம் கோடி முதலீடுகள் வந்ததால் கூறினார். ஷிவ்நாடார், மார்ட்டின் போன்ற உள்ளூர் முதலாளிகளை முதலீடு செய்ய வைக்கலாமே" என்று யோசனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், "மூன்று மடங்கு மின் கட்டணத்தையும் சொத்து வரியும் உயர்த்துகின்றார்கள். இதை நானும் நீங்களும் பேசிப் பயனில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தான் பேச தொடங்கினால் தான் அது கவனிக்கப்படும். மக்கள் சகித்துக் கொண்டு விட்டார்கள். அதைப் பேசி பயனில்லை. மின்கட்டணம் உயர்ந்தால் உனக்கு என்ன கட்டும்? நாங்களே சும்மா இருக்கிறோம் என்று மக்கள் பேசுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, ஊழலற்ற லஞ்சமற்ற ஆட்சியை கொடுத்துக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். என் தம்பி இன்றைய முதல்வர் அவரிடம் இதை கேளுங்கள் என்று பதிலளித்தார்.
இடைத்தேர்தலில் நாதக எப்படி செயல்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இடைத்தேர்தலில் நாங்கள் எப்படி செயல்படுகிறோம் என்பதை அங்கு வந்து பாருங்கள். இடதுசாரிகள் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என்ற முடிவை நான் பாராட்டுகிறேன். காலம் தாழ்த்தி இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பதில் எனக்கு வருத்தம். முன்பே இதை எடுத்திருக்க வேண்டும். நாட்டில் இருந்த தீய ஆட்சி முறைக்கு துணை நின்று இருக்கிறார்கள். இப்போது இந்த முடிவை எடுத்ததற்கு நான் பாராட்டுகிறேன். முன்பே சொல்லியிருந்தால் அவர்கள் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள் ஆதரித்திருப்போம். நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு இருக்க மாட்டோம்” என்றார்.
"அதிமுகவின் நின்று வெற்றி பெற்று பதவியை ராஜினாமா செய்ததால் தான் இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் இன்று வெற்றி பெற்று சரியாக 12 நாள் கழித்து பதிவு வழங்கியதற்கான காரணம் என்ன? தேவை என்னவென்று தவெக வேட்பாளர்கள் பதில் கூற வேண்டும். எதற்காக நீங்கள் பதவி விலகு? நீங்கள் காரணத்தை நான் கேட்பேன். இதே சட்டமன்ற உறுப்பினர் பதவியை தான் மக்கள் உங்களுக்கு கொடுத்தார்கள். பதவியை விலக காரணம் என்ன? பதவி விலகி விட்டு வந்து தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து மீண்டும் அதே சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காரணம் என்ன? இதற்கு இடையில் என்ன நடந்திருக்கிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மக்கள் காசை ஒரு துளியும் வீணடிக்க மாட்டேன் என்று கூறிய முதலமைச்சர் இது மக்கள் காசை வீணடிப்பதா இல்லையா? இது உங்களால், உங்கள் கட்சியால் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டதா இல்லையா? நீங்கள் தானே அவர்களை பாருங்கள் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறினீர்கள். குறைந்தது 50 கோடி இடைத்தேர்தலுக்கு செலவாகிறது. அந்த செலவு யார் காசு? எல்லாம் மக்கள் காசு. அவர்களின் காசை வீணடிப்பதா இல்லையா என்று கேள்வி எழுப்பினார்.
தற்பொழுது தமிழக வெற்றிக் கழகம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக இன்று என்ன செய்ய போகிறீர்கள்? ஆளும் கட்சியில் இருந்தால்தான் வேலை செய்ய முடியும் என்ற கருத்து உருவாக்கத்தை மக்களிடம் விதைத்தீர்கள் என்றால் இது அதிபர் ஆட்சியா? ஜனநாயகமே இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
"எதிர்க்கட்சி இருக்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? அப்படி என்றால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி நிதி அரசு கொடுக்குமா, கொடுக்காதா? அந்த தொகுதியில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுமா, நிறைவேற்றாதா? யார் பதில் சொல்வது? ஆளுங்கட்சியாக இருந்தால்தான், மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கருத்து எவ்வளவு ஆபத்தானது” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: “விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை” - தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் பரபரப்பு பேட்டி
”பதவிக்காக அங்கு இங்கு ஓடுபவர்களுக்கு இடைத்தேர்தலில் மிக சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும். அடிப்படை அரசியல் மாற்றமாக, இது போன்ற வேலை செய்பவர்களுக்கு பத்தாண்டுகள் தேர்தலில் நிற்க தடை செய்ய வேண்டும். அப்படி நின்றே ஆக வேண்டும் என்றால் அந்த தொகுதியில் செலவாகும். 50 கோடி நீங்கள்தான் கட்ட வேண்டும் என்று கூற வேண்டும் என்ற விதியை கொண்டு வர வேண்டும். அதுதான் மாற்றம்” என்று சீமான் தெரிவித்தார்.
